கொரோனாவிலிருந்து மீண்டார் அக்ஷர் பட்டேல்

Indian Premier League - 2021

114
Delhi Capitals Twitter

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட டெல்லி கெபிடல்ஸ் அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேல் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் அந்த அணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.  

டெல்லி கெபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் அக்ஷார் பட்டேலுக்கு கடந்த 3ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லி கெபிடல்ஸ் வீரர் அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா தொற்று

அக்ஷார் பட்டேல் கடந்த மாதம் 28ஆம் திகதி (மார்ச்) மும்பையில் டெல்லி கெபிடல்ஸ் அணியுடன் இணைந்தார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்தது. 

அதன்பின் 2ஆவது கட்டமாக ஏப்ரல் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்

இந்த நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் முடிவு அக்ஷார் பட்டேலுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது

எனவே, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக தேறிய அவர், 20 நாட்களுக்குப் பின் டெல்லி கெபிடல்ஸ் அணி வீரர்களின் பயிற்சி முகாமில் நேற்று (23) இணைந்தார்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட IPL வீரர்கள்

இதுகுறித்த வீடியோ ஒன்றை டெல்லி அணி நிர்வாகம் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதில் பயிற்சி முகாமில் இணைந்த அக்ஷார் பட்டேலுக்கு சகவீரர்கள் வரவேற்பு அளித்தனர்.  

இதுகுறித்து அக்ஷார் பட்டேல் கூறுகையில், ”மீண்டும் டெல்லி அணியில் இணைந்ததில் மகிழ்ச்சி. இது, டெஸ்டில் அறிமுகமானதற்கு பின், என் வாழ்வின் மிகச் சிறந்த தருணமாக கருதுகிறேன். ஹோட்டல் அறையில் 20 நாட்கள் தனிமையில் இருந்த போது IPL போட்டிகளை மட்டும் கண்டு ரசித்தேன். டெல்லி அணிக்கு கிடைத்த வெற்றி, விரைவில் அணியில் இணைய ஊக்கம் அளித்தது. மீண்டும் பயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்” என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, அக்ஷார் பட்டேலுக்கு மாற்றீடு வீரராக மும்பையின் இளம் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ஷம்ஸ் முலானியை டெல்லி கேபிடல்ஸ் அணியை ஒப்பந்தம் செய்தமை குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணா கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், சுய தனிமைப்படுத்தலின் பிறகு மீண்டும் அணியுடன் இணைந்துகொண்டார்

பெங்களூர் அணியின் இரண்டாவது வீரருக்கு கொவிட்-19!

அதேபோல, மும்பை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் சதம் அடித்த தேவ்தத் படிக்கலுக்குப் பிறகு அக்ஷார் பட்டேல் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டார்

எனினும், முதல் வீரராக கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தேவ்தத் படிக்கல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்துகொண்டார்

இதனிடையே, டெல்லி கெபிடல்ஸ் அணி வீரரான தென்னாபிரிக்காவின் அன்ரிச் நோக்கியாவும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, டெல்லி கெபிடல்ஸ் அணி, நாளை சென்னையில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. இப்போட்டியில் அக்ஷார் பட்டேல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…