அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் இருவருக்கு உபாதை

Australia tour of Sri Lanka 2022

1372

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி வீரர்களான அஸ்டன் ஏகார் மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் ஆகியோருக்கு உபாதை ஏற்பட்டுள்ளது.

நேற்று (14) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் போது, இவர்கள் இருவரும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸ்வெலின் ஆட்டத்தோடு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெற்றி

மார்கஸ் ஸ்டொயினிஸ் மற்றும் அஸ்டன் ஏகார் ஆகிய இருவருக்கும் இடுப்பு பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்காரணமாக இவர்கள் இருவரும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள இவர்கள் இருவருக்கும் பதிலாக, இலங்கை A அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய துடுப்பாட்ட வீரர் டிராவிஷ் ஹெட் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் மெட் குஹ்னெமன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இதில், மெட் குஹ்னெமன் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொள்வார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

அஸ்டன் ஏகாருக்கு உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய குழாத்தில் வெறும் 5 முதன்மை பந்துவீச்சாளர்கள் மாத்திரமே உள்ளனர். அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை சீன் எபோட், மிச்சல் மார்ஷ், மிச்சல் ஸ்டார்க் மற்றும்  கேன் ரிச்சட்சன் ஆகியோர் இதுவரையில் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதேவேளை இலங்கை அணியை பொருத்தவரை வனிந்து ஹஸரங்கவின் மேல் தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது விளையாட தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ள போதிலும், அவருக்கு மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று மாலை கிடைக்கப்பெறும். எனவே, இதனைத்தொடர்ந்து வனிந்து ஹஸரங்க தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<