விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள், பரபரப்புகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்தது. இதில் கிரிக்கெட், கால்பந்து, மெய்வல்லுனர் என பல்வேறு விளையாட்டுகளில் முக்கியமாக இடம்பெற்ற நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

ஜனவரி

இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20 உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த தலைவரான மகேந்திர சிங் டோனி, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி இந்திய ஒரு நாள் மற்றும் T-20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

பெப்ரவரி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான 36 வயதுடைய சஹீட் அப்ரிடி, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். அதிரடி ஆட்டக்காரரான இவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து 2010ஆம் ஆண்டும், ஒரு நாள் போட்டிகளிலிருந்து 2015ஆம் ஆண்டும் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிக விலைக்கு ஏலம் கோரப்பட்ட இங்கிலாந்து அணியின் வீரராக பதிவாகினார். ஸ்டோக்ஸினை ரைசிங் புனே சுபர்ஜயண்ட்ஸ் அணி இலங்கை நாணய மதிப்பில் ரூபா. 350,௦௦௦,௦௦௦ இற்கு வாங்கியது.

மார்ச்

2016/17 பருவகாலத்துக்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி வாரத்திற்கான தீர்மானம்மிக்க போட்டியில் ரினௌன் விளையாட்டுக் கழகத்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய கொழும்பு கால்பந்துக் கழகம் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் சம்பியனாகியது.

2ஆவது தடவையாக நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடரில் குவாட்டா கிலெடியேட்டர்ஸ் அணியை 56 ஓட்டங்களால் வீழ்த்தி பெஷாவர் சல்மி அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இதன் இறுதிப் போட்டி சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றலுடன் பாகிஸ்தானில் இடம்பெறும் ஒரு போட்டியாக லாஹுரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மணிக்கு 161.1 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசுகின்ற உலகின் 3ஆவது வேகப்பந்து வீச்சாளரான அவுஸ்திரேலியாவின் ஷோன் டெய்ட், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுத் தொடரில் பரகுவே அணிக்கு எதிராக பிரேசில் அணி 3-0 என வெற்றிபெற்று தென் அமெரிக்க மண்டலத்தில் இருந்து 2018 பிபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதிபெற்ற முதல் அணியாக இடம்பிடித்தது.

பங்காளதேஷ் கிரிக்கெட் அணி வரலாற்றில் முதல் தடையாக இலங்கை அணியினை டெஸ்ட் போட்டியொன்றில் வீழ்த்தியது. கொழும்பு  P. சரவணமுத்து மைதானத்தில் வைத்தே இந்த வெற்றியினை அவ்வணி பெற்றிருந்தது.

2016ஆம் ஆண்டுக்கான .சி.சியின் சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுகளை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் பெற்றுக்கொண்டார்.

ஏப்ரல்

இந்திய அரசினால் பல்வேறு துறைகளில் சேவையாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற இந்தியாவின் 4ஆவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார்.

ஆசிய கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் பங்களாதேஷில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கை அணியின் பிரபல வலைப்பந்து ஷூட்டரும், ஆசியாவின் மிகவும் உயரமான வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்திரேலியாவின் வெஸ்ட் பெல்கன்ஸ் மற்றும் மெல்பேர்ன் சென்ட் எல்பன்ஸ் ஆகிய அணிகளுக்காக முதற்தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரும், சிக்ஸர் மன்னருமான கிறிஸ் கெய்ல், T-20 அரங்கில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக புதிய சாதனை படைத்தார். .பி.எல் தொடரில் குஜராத் அணிக்கெதிரான லீக் போட்டியிலேயே அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

டெஸ்ட் அரங்கில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரராக யூனிஸ் கான் இடம்பிடித்தார். ஜமைக்காவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

மே

10ஆவது .பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் ரைஸிங் புனே சுப்பர் ஜெயின்ட் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

பாகிஸ்தான் அணிக்காக சுமார் 2 தசாப்தங்களாக விளையாடிவந்த கிரிக்கெட் ஜாம்பவான்களாக மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனிஸ் கான் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரினையடுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றனர்.

2017ஆம் ஆண்டுக்கான எப். கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஜாவா லேன் அணியை 5-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய இலங்கை இராணுவ அணி 5ஆவது தடவையாகவும் எப். கிண்ணத்தை வென்றது.

டெஸ்ட் அந்தஸ்து பெறாத கத்துக்குட்டி அணியான ஸ்கொட்லாந்து அணியுடனான உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வரலாற்றுத் தோல்வியைத் தழுவியது.

லா லிகா கால்பந்து தொடரில் 2016/2017 பருவகாலத்துக்கான கடைசிப் போட்டியில் மலாகா அணியை 2-0 என வீழ்த்திய ரியல் மெட்ரிட் அணி 33ஆவது தடவையாக சம்பியன் பட்டம் வென்றது.

கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக 5 சதங்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர ஜாம்பவானுமான குமார் சங்கக்கார படைத்தார்.

ஸ்பெய்னில் உள்ள கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெற்றுவரும் கோபா டெல் ரே கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அலாவெஸ் அணியை வீழ்த்திய பார்சிலோனா அணி 3ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

ஜுன்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படுகின்ற அதிகூடிய உயர் விருதான புகழ் பூத்தவர்கள் (HALL OF FAME) விருது இலங்கை அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர சுழற்பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரனுக்கு .சி.சியினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக சவாலளிக்கும் வகையில் விளையாடி வந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது.

.சி.சியின் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், அதன்பின் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தைக் கைப்பற்றி அவ்வணி சாதனை படைத்தது.

ஜுலை

ரஷ்யாவில் நடைபெற்ற 8 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 10ஆவது கொன்படரேஷன் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் உலகக் கிண்ண நடப்புச் சம்பியனான ஜேர்மனி அணி, 1-0 என சிலியை வீழ்த்தி முதல்முறையாக சம்பியனாகத் தெரிவாகியது.

இலங்கை கிரிக்கெட் அணியினை ஜிம்பாப்வே அணி இலங்கை மண்ணில் வைத்து முதற்தடவையாக ஒரு நாள் தொடரொன்றில் 3-2 என தோற்கடித்தது. இந்த தோல்வியின் காரணமாக இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஒரு தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக்கொண்ட இலங்கை அணி 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இதில் பெண்களுக்கான 800 மீற்றரில் பங்குபற்றிய நிமாலி லியானாரச்சி, 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்து, உலக மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

Nimali

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனையான சமரி அத்தபத்து, இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுடனான லீக் போட்டியில் ஆட்டமிழக்கமால் 178 ஓட்டங்களைப் பெற்று ஒரு நாள் அரங்கில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற 3ஆவது வீராங்கனையாகவும், இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீராங்கனையாகவும் இடம்பிடித்தார்.

.சி.சியின் மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

லண்டனில் நடைபெற்ற 8ஆவது உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் எப் – 46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாற்றுத்திறனாளி பிரியன்த ஹேரத், 57.93 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆகஸ்ட்

ஒலிம்பிக்கில் 9 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த உலகின் அதிவேக வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட், லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் தொடருடன் ஓய்வு பெற்றார்.

ஐரோப்பாவின் இரு பிரதான கழக தொடர்களின் சம்பியன்களுக்கு இடையிலான ஐரோப்பிய சுப்பர் கிண்ணத்தில் மென்செஸ்டர் யுனைடட் அணியை 2-1 என வீழ்த்திய ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் அணி சம்பியனாகத் தெரிவானது.

பார்சிலோனா அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வந்த பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர், பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கழகமான பாரிஸ் செயின்ட்ஜெர்மைன் அணியுடன் 222 மில்லியன்களுக்கு 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இங்கிலாந்து தேசிய கால்பந்து அணிக்காக விளையாடி அதிக கோல்கள் பெற்ற வீரராக விளங்கிய 31 வயதான வேய்ன் ரூனி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழக அணி தனது மிகப் பெரிய போட்டியாளரான பார்சிலோனாவை ஸ்பானிய சுப்பர் கிண்ண தொடரின் இரண்டாம் கட்டப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்மூலம் மொத்தம் 5-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று பத்தாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்றது.

செப்டெம்பர்

இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக கடந்த 2 வருடங்களாக விளையாடி வந்த இலங்கை அணியின் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஒக்டோபர்

இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை 5-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து இளையோர் அணி முதல் முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றது.

இலங்கையில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டிகளின், 3ஆம் கட்ட போட்டிகளில், இலங்கை அணி தென்கொரிய அணியை 22-05 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றதன் மூலம் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது.

2016இல் ஐரோப்பிய கிண்ணத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த ஐஸ்லாந்து, கொசோவோ அணியுடனான தகுதிச்சுற்றில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2018 பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெற்றது.

நவம்பர்

பிபா உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டியில் சுவீடன் அணியுடனான பிளே ஓப் சுற்றில் தோல்வியை சந்தித்த இத்தாலி அணி 60 வருடங்களுக்குப் பிறகு பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

நவீன கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் அணியின் ஒப்பற்ற கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக விளங்கிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சயீட் அஜ்மல், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்றார்.

இந்த தலைமுறையின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவராகத் திகழும் லியொனல் மெஸ்ஸி, 2021ஆம் ஆண்டு வரை பார்சிலோனா கழகத்துடன் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

மலேஷியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 185 ஓட்டங்களால் இலகுவாக வென்று ஆப்கானிஸ்தான் அணி முதற்தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

ஸ்பெய்னின் பிரபல பார்சிலோனா கழகத்துக்காக விளையாடி வருகின்ற அர்ஜென்டீனாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி, ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகின்ற தங்க பாதணி (Golden boot) விருதை 4ஆவது தடவையாகப் பெற்றுக்கொண்டார்.

முறையற்ற பாணியில் பந்து வீசியது ஊர்ஜிதம் செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தானின் சகலதுறை வீரரான மொஹமட் ஹபீசுக்கு .சி.சியினால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லர் T-20 சர்வதேச போட்டிகளில் அதிகுறைந்த பந்துகளில் சதம் கடந்த வீரராக புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். பங்களாதேஷ் அணிக்கெதிராகவே அவர் இந்த ஓட்டங்களைக் குவித்தார்.

டிசம்பர்

இங்கிலாந்து அணியுடனான வரலாற்றுச்சிறப்புமிக்க ஆஷஸ் கிண்ண டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் வென்ற அவுஸ்திரேலிய அணி மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சிய நிலையிலேயே தொடரைக் கைப்பற்றியது.

மொஹாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டைச் சதம் குவித்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டைச் சதங்கள் விளாசிய முதல் வீரராக பதிவாகினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற T-20 போட்டியில் 35 பந்தில் சதம் அடித்து அதிவேக சதமடித்த டேவிட் மில்லரின்  உலக சாதனையையும் சமன் செய்தார்.

ஐரோப்பிய கால்பந்து லீக் தொடர்களில் முக்கிய இடத்தை வகிக்கின்ற லா லிகா போட்டித் தொடரில் 2016/17 பருவகாலத்திற்கானஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்மற்றும்அதிக கோல்களைப் பெற்ற வீரர்ஆகிய 2 விருதுகளையும் பார்சிலோனா அணியின் நட்சத்திர ஜாம்பவானான லியொனல் மெஸ்ஸி பெற்றுக்கொண்டார்.

பிரேசிலின் கிரிமியோ அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய ரியல் மெட்ரிட் கழகம் பிபா கழக உலகக் கிண்ணத்தை தொடர்ந்து இரண்டாவது முறை வென்ற முதல் அணியாக சாதனை படைத்தது.

கிரிக்கெட் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்தும் விதமாக முதற்தடவையாக நடைபெற்ற அணிக்கு பத்து ஓவர்கள் கொண்ட, T-10 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பன்ஞாபி லெஜென்ட்ஸ் அணியை 8 விக்கெட்டுக்காளால் வீழ்த்தி கேரளா கிங்ஸ் சம்பியன் பட்டத்தை வென்றது.

போர்த்துக்கல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிறந்த கால்பந்து வீரருக்கான பெலான் டி ஓர் விருதை 5ஆவது முறையாகவும் தட்டிச் சென்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டைச் சதங்களைக் குவித்த முதல் தலைவர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுக்கொண்டார். இலங்கைக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்த அவர், டெஸ்ட் அரங்கில் தனது அதிகபட்ச(243) ஓட்டத்தையும் பதிவுசெய்தார்.