இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

137

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உறுப்புரிமை எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எனும் வகையில் நாமல் ராஜபக்ஷவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (02) வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை ரக்பி சம்மேளனத்தின் நிர்வாகத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான அமல் எதிரிசூரிய நியமிக்கப்படுவதாக, குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைவர் ரிஸ்லி இலியாஸ் தலைமையிலான நிர்வாகக் குழு விளையாட்டுத்துறை அமைச்சரின் உத்தரவை புறக்கணித்ததை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ரக்பி சங்கம் தொடர்பில் எழுந்த சட்டபூர்வ பிரச்சினை ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டமைக்காக இவ்வாறு இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மேல் மாகாண ரக்பி சம்மேளனத்தினால் வருடாந்த கட்டணத்தை செலுத்தாமை காரணமாக 2020 ரக்பி சம்மேளனத்தின் தேர்தலில் பங்குபற்றவோ அல்லது வாக்களிக்கவோ மேல் மாகாண ரக்பி சம்மேளனத்திற்கு அப்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெரும தடை விதித்திருந்தார்.

2020 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்தில், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் டி. எஸ் சந்திரசேகர அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஒப்புதலுடன் மேல் மாகாண ரக்பி சம்மேளனத்தின் உறுப்புரிமை 16,17 மற்றும் 18 ஆகிய பிரிவுகளின் கீழ் இரத்து செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், மேல் மாகாண ரக்பி சம்மேளனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் குறித்த தேர்தல்களில் பங்குபற்றியதோடு, இலங்கை ரக்பி சம்மேளனத்தின் ஏனைய கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தற்போதைய நிலை குறித்து ThePapare.com இற்கு கருத்து தெரிவித்த விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய,

இலங்கை ரக்பி சம்மேளனத்துக்கு தற்போது இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை தற்போதைய நிலையில் நியமிக்கப் போவதில்லை எனவும், தற்போது நடைபெற்று வருகின்ற ரக்பி லீக்கை முன்னெடுத்துச் செல்ல ஏப்ரல் 4 ஆம் திகதி குழுவொன்று நியமிக்கப்படும் எனவும், புதிய நிர்வாகக் குழுவொன்றை தேர்ந்தெடுக்கின்ற தேர்தல் மே மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…