ஏன் குசல் மென்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?; விளக்கும் சந்திமால்

2557

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறினாலும், களத்தடுப்பு பயிற்சியின் போது காட்டிய உத்வேகத்தை அடிப்படையாக வைத்தே இறுதிப் போட்டியில் அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டதாக இலங்கை ஒருநாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.  

ஆடாமல் இருந்து அணியின் வெற்றிக்கு பங்களித்த மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியானது தனக்காக …

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்றுமுன்தினம் (23) கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி 219 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியானது இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றியாகவும், இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை அணியால் பெறப்பட்ட மிகப்பெரிய ஒருநாள் போட்டி வெற்றியாகவும் அமைந்திருந்த போதும், தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அத்துடன், 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டியொன்றில் இலங்கை அணியின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் அரைச்சதம் குவித்து அசத்தியிருந்தனர். இப்போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல (95), சதீர சமரவிக்ரம (54) ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 137 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அரைச்சதங்களை குவித்திருந்ததுடன், 3ஆவது இலக்கத்தில் களமிறங்கிய அணித் தலைவர் தினேஷ் சந்திமாலும் (80), 4ஆவது இலக்கத்தில் களமிறங்கிய குசல் மெண்டிஸும் (56) அரைச் சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.  

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

இது இலங்கை அணியில் விளையாடிய ஒவ்வொரு வீரர்களினதும் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றியாகும். இந்தத் தொடரில் முதல் நான்கு போட்டிகளைவிட இறுதிப் போட்டியில் சகலதுறையிலும் நாம் பிரகாசித்திருந்தோம். இதன் காரணமாகவே இவ்வாறானதொரு வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அத்துடன், உலகின் முதல்நிலை ஒருநாள் அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட இந்த வெற்றியானது எமது எதிர்கால போட்டித் தொடர்களுக்கு உத்வேகத்தைக் கொண்டுக்கும் என நம்புகிறேன்.

இறுதிப் போட்டியை சாதனை வெற்றியாக மாற்றிய இலங்கை அணி

இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு ஆர்.பிரேமதாஸ …

இந்தப் போட்டியில் நிரோஷன் திக்வெல்லவும், சதீர சமரவிக்ரமவும் முதல் விக்கெட்டுக்காக மிகச் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். பின்னர் என்னுடன் ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இணைப்பாட்டமொன்றை வழங்கியிருந்தார். எனவே, இந்த மூன்று வீரர்களும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்தனர். அதேபோல, பந்துவீச்சையும், களத்தடுப்பையும் மறந்துவிட முடியாது. இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாம் உள்ளோம். அவர்கள் ஒவ்வொரு நாளும் பல விடயங்களைக் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். அதேபோல, ஒவ்வொரு போட்டித் தொடர்களுக்கும் முன் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் கலந்து ஆலோசிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய குசல் மென்டிஸ், 25 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதாவது, இங்கிலாந்து அணியுடான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதில் ஆறு சிக்ஸர்களும், ஒரு பௌண்டரியும் உள்ளடங்கும்.

இந்த நிலையில், குசல் மெண்டிஸின் இந்த மீள்வருகை ஆட்டம் குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சந்திமால், களத்தடுப்பு பயிற்சிகளின் போது குசல் மென்டிஸ் வெளிப்படுத்திய திறமையை கருத்திற்கொண்டே நாங்கள் அவரிற்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க முன்வந்தோம்.  

குசல் மெண்டிஸ் தொடர்பில் நாம் மிகுந்த நம்பிக்கை வைத்தோம். அவர் களத்தடுப்பில் மிகச்சிறந்த மனோநிலையை வெளிப்படுத்தினார். குசல் மென்டிஸ் போன்ற வீரர் ஒருவரால் வெகு விரைவிலேயே பழைய சிறப்பான நிலைக்கு மீள திரும்ப முடியும் என்பதையும் அறிந்து வைத்திருந்தோம். அந்த நம்பிக்கையில் தான் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கினோம். இலங்கை கிரிக்கெட்டுக்காக எதிர்காலத்தில் சிறப்பாக விளையாடுகின்ற திறமை படைத்த குசல் மெண்டிஸ், இங்கிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்று மிகச்சிறப்பாக செய்து முடித்தார் எனவும் சந்திமால் குறிப்பிட்டுள்ளார்.   

இதேவேளை, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் இன்னும் சில ஒருநாள் போட்டித் தொடர்களில் இலங்கை அணி விளையாட உள்ளதால், உலகக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு இளம் வீரர்களுக்கு இன்னும் கதவு திறந்து இருப்பதாகவும் சந்திமால் இதன்போது தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை ரசிகர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சந்திமால் கருத்து வெளியிடுகையில்,  

சொந்த மைதானத்தில், அதுவும் கொழும்பில் வைத்து எமது ரசிகர்களின் முன்னால் விளையாடுவதை நாம் அதிகம் விரும்புகிறோம். ஆனால், விடுமுறை நாளொன்றில் போட்டி நடைபெறாததால் பெரும்பாலான ரசிகர்கள் போட்டியை பார்க்க வந்திருக்க மாட்டார்கள். அதேபோல, எமது வெற்றிக்கும், தோல்விக்கும் பின்னால் எமது ரசிகர்களும், ஊடகங்களும் தான் எப்போதும் இருந்து வருகின்றன. எனவே, உங்களது ஒத்துழைப்பு தொடர்ந்து எமக்கு வழங்குங்கள். நிச்சயம் உலகின் சிறந்த அணியாக நாம் வலம்வருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…