ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த ஆப்கான் அணி

319
Image Courtesy - ICC
 

ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற சுப்பர் 4 சுற்றின் விறுவிறுப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் தோல்வியடைந்து, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை போராடி வென்றது பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை போராடி வென்றது பாகிஸ்தான் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசியக்…….

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்திருந்த 250 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி 246 ஓட்டங்களை பெற்றபோதும், 3 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் பந்து வீச்சில் மிரட்டிய ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களில் வெற்றிபெற்றிருந்தது.

இவ்வாறான நிலையில், இந்தப் போட்டியில் பதிலடி கொடுக்கும் நோக்கில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் பந்து வீச்சளார்களை நேர்த்தியாக எதிர்கொண்டு, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகள் 18 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதிலும் லிடன் டாஸ் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோர் இணைந்து சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுக்க, இம்ரூல் கையிஸ் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் அரைச் சதங்கள் விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தனர்.

“சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி இலகு வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இரண்டாம் கட்டப் போட்டிகளான “சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்தியா 7 விக்கெட்டுக்களால்……

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய இம்ரூல் கையிஸ் 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மொஹமதுல்லா அதிகபட்சமாக 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களை அடுத்து லிடன் டாஸ் 41 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 33 ஓட்டங்களையும் தங்கள் பங்குக்கு பெற்றுக்கொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அப்டப் அலாம் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்த நிலையில், மொஹமட் சேஷார்ட் மற்றும் ஹசமதுல்லாஹ் சஹிடி ஆகியோரின் உதவியுடன் ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது. மொஹமட் சேஷார்ட் 53 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, ஹசமதுல்லாஹ் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடினார்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காத போதும், ஓட்டவேகம் மந்தமாக நகர்த்தப்பட்டது. 30 ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி பெறவேண்டிய ஓட்ட வேகம் 7 ஓட்டங்களை தாண்டியிருந்ததால், அந்த அணி வேகமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது.

இலங்கை ஒருநாள் அணித் தலைவராக சந்திமால் நியமனம்; மெதிவ்ஸை விலகுமாறு கோரிக்கை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக……

இதில் ஹசமதுல்லாஹ் 71 ஓட்டங்களையும், அணித் தலைவர் அஸ்கர் அப்கான் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்த நிலையில், மொஹமட் நபி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இவர் 28 பந்துகளுக்கு 38 ஓட்டங்களை விளாசி, அணி வெற்றியிலக்கை நெருங்குவதற்கு உதவினார். நபி ஆட்டமிழக்கும் போது, ஆப்கானிஸ்தான் அணிக்கு 9 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி பக்கம் வெற்றி திரும்பியது.

எனினும் முஷ்தபிசூர் ரஹ்மான் வீசிய இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ரஷீட் கான் இரண்டாவது பந்தில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. இறுதி ஓவரில் அந்த அணியால் 4 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்ததுடன், 246/7 ஓட்டங்களை பெற்று, மூன்று ஓட்டங்களால் மயிரிழையில் தோல்வியடைந்தது.

இதன்படி, ஆசியக் கிண்ண சுப்பர் 4 சுற்றின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளதுடன், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். ஏற்கனவே தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டி சுருக்கம்

பங்களாதேஷ் 249/7 (50), மொஹமதுல்லா ரியாத் 74, இம்ரூல் கையிஸ் 72*, அப்டாப் அலாம் 54/3

ஆப்கானிஸ்தான்246/7 (50), ஹசமதுல்லாஹ் சஹிடி 71, மொஹமட் சேஷார்ட் 53, முஷ்தபிசூர் ரஹ்மான் 44/2, மஷ்ரபீ மொர்டஷா 62/2

முடிவு – பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றி

ஆட்டநாயகன்மொஹமதுல்லா ரியாத்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<