இலங்கை ஒருநாள் அணித் தலைவராக சந்திமால் நியமனம்; மெதிவ்ஸை விலகுமாறு கோரிக்கை

3

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணித் தலைவராக தினேஷ் சந்திமாலை தெரிவுக் குழுவினர் நியமித்துள்ளனர்.

‘இதன்படி, இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணித்தலைமை பொறுப்பில் இருந்து அஞ்செலோ மெதிவ்ஸை விலகிக் கொள்ளும்படி அவர்கள் கோரியுள்ளனர்’ என்று இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்து ஆசிய கிண்ண தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி அதிர்ச்சி தரும் வகையில் வெளியேறியதை அடுத்தே தெரிவுக் குழுவினர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

ஜிம்பாப்வேயுடனான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து தலைமை பதவியை இராஜினாமா செய்த மெதிவ்ஸ் ஆறு மாதங்களுக்குள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒருநாள் அணித்தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும் அவர் தலைமை பொறுப்பை ஏற்று இரண்டு வாரங்களுக்குள்ளேயே உபாதை காரணமாக அணியில் இருந்து விலகியதோடு பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இலங்கை அணித்தலைமை பொறுப்பு சந்திமாலுக்கு வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு முதல் முறை இலங்கை ஒருநாள் அணிக்கு தலைமை வகித்தது தொடக்கம் மெதிவ்ஸ் இதுவரை 106 போட்டிகளில் தலைவராக செயற்பட்டு 49 போட்டிகளிலேயே வெற்றியீட்டியுள்ளார். அவரது தலைமையில் இலங்கை அணி 51 தடவைகள் தோல்வியை  சந்தித்துள்ளது.

இலங்கை டெஸ்ட் அணியின் நிரந்தர தலைவரான சந்திமால் ஏழு ஒருநாள் போட்டிகளிலேயே அணித்தலைவராக செயற்பட்டிருப்பதோடு  அதில் ஐந்து போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளார்.