வடக்கிற்கு பெருமை சேர்த்த யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்

540

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனம் ஒழுங்கு செய்த 16 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை வீராங்கனைகளுக்கான C பிரிவுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த திருக்குடும்ப கன்னியர் மடம் அணி சம்பியன்களாக மகுடம் சூடியுள்ளது.

அத்துடன், இந்த வெற்றியுடன் திருக்குடும்ப கன்னியர் மடம் வட மாகாணத்தில் இருந்து முதல் தடவையாக 16 வயதின்கீழ் பிரிவு கூடைப்பந்து தொடரொன்றில் தேசிய சம்பியன்களாக தெரிவாகி யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்திருக்கின்றது.

16 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை வீராங்கனைகளுக்கான C பிரிவு தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள் வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு புனித பேதரு கல்லூரி மைதானங்களில் கடந்த வாரம் நடைபெற்றிருந்தன.

மொத்தம் 10 அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் குழு A இல் போட்டியிட்ட திருக்குடும்ப கன்னியர் மட அணியினர், குழுநிலையில் முதலிடம் பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியிருந்தனர். பின்னர், அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கொட்டாஞ்சேனை Good Shepherd Convent மகளிர் அணியினை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு St. Bridgets Convent மகளிர் அணியினை 26-14 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட வீராங்கனைகள் தொடரின் சம்பியன்களாக தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட அணியானது, அடுத்த ஆண்டுக்கான தொடரில் பிரிவு B அணியாக தரமுயர்த்தப்பட்டிருக்கின்றது. எனினும், அவர்களுக்கு பிரிவு A அணிகளுடனும் போட்டியிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்த தொடரின் பெறுமதிமிக்க வீராங்கனையாக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தினைச் சேர்ந்த ஜெபோசினி ரவீந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது .

>>  மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<