ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை போராடி வென்றது பாகிஸ்தான்

438
Image courtesy - ICC

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை போராடி வென்றது பாகிஸ்தான்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரில், நேற்று (22) நடைபெற்ற இறுதி நான்கு அணிகளுக்கான போட்டியில் (சுப்பர் 4), பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்திருந்த 258 என்ற வெற்றி இலக்கினை நோக்கிய பாகிஸ்தான் அணி சொஹைப் மலிக்கின் சிறப்பான அரைச்சதத்துடன் இறுதி ஓவரில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

ரஷீத் கான் சகலதுறைகளிலும் அசத்த பங்களாதேஷை துவம்சம் செய்த ஆப்கான்

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் சேஷாட் மற்றும் இஹாசனுல்லாஹ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தனர்.

இதன்பின்னர் களமிறங்கிய ஹஷ்மதுல்லாஹ் சஹிடி மற்றும் இவ்வருடம் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிக ஓட்டங்களை பெற்றுள்ள ரஹ்மத் ஷாஹ் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்துடன் ஓட்டங்களை குவித்தனர். இருவரும் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, ரஹ்மத் ஷாஹ் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் பின்னர் ஹஷ்மதுல்லாஹ் சஹிடியுடன் இணைந்த அணித் தலைவர் அஸ்கர் அப்கான், வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்கத் தொடங்கினார். அஸ்கர் ஆப்கான் 56 பந்துகளுக்கு 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஹஷ்மதுல்லாஹ் சஹிடி 118 பந்துகளுக்கு 97 ஓட்டங்களை பெற்று, தனது கன்னி சதத்தை தவறவிட்டார்.

எவ்வாறாயினும் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணிசார்பில் பந்து வீச்சில் மொஹமட் நவாஸ் 3 விக்கெட்டுகளையும், சஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் எதிர்பார்க்கப்பட்ட பக்ஹர் ஸமான் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த பாபர் அஸாம் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.

இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 154 ஓட்டங்களை பகிர்ந்து அணியை சிறப்பான நிலைக்கு அழைத்துச் சென்றனர். இதில் துரதிஷ்டவசமாக 80 ஓட்டங்களை பெற்றிருந்த இமாம் உல் ஹக் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க, பாபர் அஸாம்ம், ரஷீட் கானின் பந்து வீச்சில் 66 ஓட்டங்களுடன் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் ஓட்டங்களை பெற்றிருந்த இரண்டு வீரர்களும் களத்திலிருந்து வெளியேறியதுடன், அணித் தலைவர் சப்ராஸ் அஹமட்டும் அணியை ஏமாற்ற, பாகிஸ்தான்  அணி அழுத்தத்துக்கு முகங்கொடுத்தது. இந்நிலையில் போட்டியில் இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டன. பாகிஸ்தான் அணியின் சொஹைப் மலிக் ஒரு பக்கம் சிறப்பாக செயற்பட, ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு சவால் கொடுக்கும் விதமாக அமைந்திருந்தது.

மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான்

எவ்வாறாயினும், இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டத்தின் உதவியுடன் பாகிஸ்தான் அணி முன்னேறத் தொடங்கியது. இறுதிக்கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சாளர்கள் விட்ட சிறு தவறுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாகிஸ்தான் அணி, 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 258 என்ற வெற்றி இலக்கை அடைந்தது. முக்கியமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளுக்கு 51 ஓட்டங்களை விளாசிய சொஹைப் மலிக், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷீட் கான் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதன்படி பாகிஸ்தான் அணி ஆசிய கிண்ணத்தின்  இறுதி நான்கு அணிகளுக்கு இடையிலான மோதலின், முதல் போட்டியில் வெற்றியீட்டியுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில் நாளை மறுதினம் (23) இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் அணி நாளை மறுதினம் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு விளையாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 257/6 (50) – ஹஷ்மதுல்லாஹ் சஹிடி 97, அஸ்கர் அப்கான் 67, மொஹமட் நவாஸ் 57/3

பாகிஸ்தான் – 258/8 (49.3) – இமாம் உல் ஹக் 80, சொஹைப் மலிக் 51, ரஷீட் கான் 46/3

ஆட்டநாயகன் – சொஹைப் மலிக்

போட்டி முடிவு – பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<