ஆரம்ப போட்டிகளில் அவிஷ்க ஏன் இணைக்கப்படவில்லை? – பதில் கூறும் டி மெல்

3094

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிய இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தும், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தை தக்கவைத்த நிலையில் நேற்றைய தினம் (08) நாடு திரும்பியிருந்தது.   

அதிக எதிர்பார்ப்புகள் அற்ற நிலையில் இலங்கை அணி உலகக் கிண்ணத்துக்கு சென்றிருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி உட்பட மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. அதுமாத்திரமின்றி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த போதும், துரதிஷ்டசமாக இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால், இலங்கைக்கு அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு கடினமாகியது.

இலங்கை வருகிறது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

இலங்கைக்கு இம்மாத பிற்பகுதியில் கிரிக்கெட் ………

இவ்வாறு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் பயணம் ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்திருந்தாலும், இளம் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோவின் துடுப்பாட்ட வெளிப்படுத்தல்கள் இரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டிருந்தது. 

அவிஷ்க பெர்னாண்டோ உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் 74 ஓட்டங்களை விளாசியிருந்த போதும், உலகக் கிண்ணத்தின் ஆரம்ப போட்டிகளில் ஏன் இணைக்கப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்திருந்தன. 

இவ்வாறான நிலையில், நேற்று நாட்டை வந்தடைந்த இலங்கை அணி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சந்திப்பில் அவிஷ்க ஏன் ஆரம்ப போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததாக அணியின் முகாமையாளரும், போட்டி மத்தியஸ்தருமான அசந்த டி மெல் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 74 ஓட்டங்களை அவிஷ்க பெர்னாண்டோ பெற்றிருந்தார். எனினும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவிஷ்க கணுக்கால் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். குறித்த உபாதை முழுமையாக குணமடைவதற்கு 10 நாட்கள் வரை சென்றது. அதன் காரணமாக அவர் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடவில்லை” 

Photos: Post #CWC19 Press Conference

அதேநேரம், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ, இந்த உலகக் கிண்ணத்தில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் இரண்டாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். சிறப்பாக துடுப்பெடுத்தாடியும் இருந்தார். இந்த நிலையில், அவிஷ்க பெர்னாண்டோ ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்படாமை குறித்தும் அசந்த டி மெல் தெளிவுப்படுத்தியிருந்தார்.

 “நாம் அவிஷ்கவை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்க எண்ணியிருந்தோம். அவர் உபாதையில் இருந்தார். ஆனாலும், அணிக்கு வேகமாக துடுப்பெடுத்தாடக்கூடிய குசல் பெரேராவை களமிறக்குவோம் என திமுத் கருணாரத்ன கூறினார். அதற்கேற்ப களமிறங்கிய குசல் பெரேரா சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடியிருந்தார். அதன் காரணமாக அணிக்குள் வந்த அவிஷ்கவை இரண்டாவது வீரராக களமிறக்கினோம்” என்றார்.

உலகக் கிண்ணத் தொடரில் நான்கு போட்டிகளில் மாத்திரமே விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோருக்கு அடுத்தப்படியாக மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றுள்ளார். இவர் ஒரு சதம் அடங்கலாக 203 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<