பங்களாதேஷ் தொடரில் இருந்து மொஹமட் ஷமி திடீர் விலகல்

164
Umran Malik Replaces Injured Pacer Mohammed Shami

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி காயம் காரணமாக பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து விலகிய நிலையில் இளம் வேகப் பந்துவிச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (04) மிர்பூரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வலைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் ஷமிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த பிறகு ஒருநாள் தொடரில் ஷமி பங்கேற்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

>> பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு புதிய தலைவர்!

இதையடுத்து, பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வேகப் பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் இந்திய ஒருநாள் அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 வயது உம்ரான் மாலிக், இந்திய அணிக்காக இதுவரை 3 ஒருநாள், 3 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதனிடையே, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடெமியில் சிகிச்சை பெற்று வரும் மொஹமட் ஷமி, பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் குறைவே என கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சகலதுறை வீரர் ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மொஹமட் ஷமியும் தொடரில் இருந்து வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<