அர்ஜுன ரணதுங்கவின் பயிற்றுவிப்பில் களமிறங்கும் ஆசிய லயன்ஸ் அணி

177
Arjuna Ranatunga to coach Asia Lions in Legends League Cricket - News Tamil
 

முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்போடு ஓமானில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் (LLC) தொடரில், ஆசிய லயன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அர்ஜுன ரணதுங்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>> பொதுநலவாய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் தகுதிகாண் தொடர் மலேசியாவில்

அந்தவகையில் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் அர்ஜுன ரணதுங்கவின் பயிற்றுவிப்பிலான ஆசிய லயன்ஸ் அணிக்கு உதவிப் பயிற்சியாளராக மெரியோ வில்லவராயன் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். 

ஆசிய லயன்ஸ் அணியில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரிய, உபுல் தரங்க, திலகரட்ன டில்ஷான், ரொமேஷ் களுவிதாரன, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், நுவன் குலசேகர, டில்ஹார பெர்னாண்டோ மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையைச் சேர்ந்த இந்த முன்னாள் வீரர்களில் ஆறு பேர் ஏற்கனவே ஓமானை வந்தடைந்திருப்பதுடன், எஞ்சிய இலங்கை வீரர்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஓமானுக்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் லெஜன்ட் லீக் தொடருக்கான ஆசிய லயன்ஸ் அணி, நாளை முதல் தமது பயிற்சிகளை ஆரம்பிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேவேளை மூன்று அணிகள் பங்குபெறவுள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆசிய லயன்ஸ் அணி, பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திரம் மிஸ்பா உல் ஹக் தலைமையில் வழிநடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>> பெதும், சந்திமால், அசலங்கவின் அபாரத்துடன் இலங்கைக்கு இலகு வெற்றி

ஆசிய லெஜன்ட்ஸ் அணியில் இலங்கையின் முன்னாள் வீரர்கள் தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றின் முன்னாள் வீரர்களும் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஆசிய லயன்ஸ் குழாம் – சொஹைப் அக்தார், சஹீட் அப்ரிடி, சனத் ஜயசூரிய, முத்தையா முரளிதரன், கம்ரான் அக்மல், சமிந்த வாஸ், ரொமேஷ் களுவிதாரன, திலகரட்ன டில்ஷான், அஷ்கர் மஹ்மூட், உபுல் தரங்க, மிஸ்பா-உல்-ஹக், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், மொஹமட் யூசுப், உமர் குல், அஸ்கார் ஆப்கான், நுவான் குலசேகர, அஜந்த மெண்டிஸ், டில்ஹார பெர்னாண்டோ

போட்டி அட்டவணை

  • ஜனவரி 20 – இந்திய மஹராஜ்ஸ் எதிர் ஆசிய லயன்ஸ்
  • ஜனவரி 21 – வேர்ல்ட் ஜயன்ட்ஸ் எதிர் ஆசிய லயன்ஸ் 
  • ஜனவரி 22 – வேர்ல்ட் லயன்ஸ் எதிர் இந்திய மஹராஜ்ஸ்
  • ஜனவரி 24 – ஆசிய லயன்ஸ் எதிர் இந்திய மஹராஜ்ஸ்
  • ஜனவரி 26 – இந்திய மஹராஜ்ஸ் எதிர் வேர்ல்ட் ஜயன்ட்ஸ்
  • ஜனவரி 27 – ஆசிய லயன்ஸ் எதிர் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் 
  • ஜனவரி 29 – இறுதிப் போட்டி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<