ஐ.சி.சி. இன் உயரிய கௌரவம் குறித்து அரவிந்த டி சில்வா

ICC Hall of Fame 2023

862
Aravinda de Silva speaks about ICC Hall of Fame award

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) இன் வரலாற்று கதநாயகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ”ஹோல் ஒப் பேம் (Hall of Fame)” இற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர சகலதுறைவீரருமான அரவிந்த டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.  

>> ஐசிசியின் உயரிய விருதை பெறவுள்ள அரவிந்த டி சில்வா

.சி.சி. இன் ஹோல் ஒப் பேம் விருது கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்த முன்னாள் வீரர்களுக்கு கௌரவம் வழங்கும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இம்முறை இந்த விருதுக்கு இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆரம்பவீரர் விரேந்திர ஷேவாக், அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை டயானா எடில்ஜி மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர் 

அதேநேரம் இந்த விருது குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் ஆகிய இலங்கைப் வீரர்களுக்குப் பின்னர் 19 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சாதித்த விடயங்களுக்காக அரவிந்த டி சில்வாவிற்கு வழங்கப்படுகின்றது.  

இந்த நிலையில் தனக்கு கிடைக்கும் கௌரவம் குறித்து டி சில்வா இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கின்றார் 

”நான் ஐ.சி.சி. இன் ”ஹோல் ஒப் பேம் (Hall of Fame)” இற்குள் உள்வாங்கப்படுவதனை மிகப் பெரிய கௌரவம் ஒன்றாக கருதி ஏற்கின்றேன். இதனை நான் ஒரு அடைவாகப் பார்ப்பதோடு எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்திற்காக நான் காட்டிய அர்ப்பணிப்பு, செய்த தியாகம் மற்றும் வெளிப்படுத்திய காதல் போன்ற விடயங்களுக்காக கிடைத்த கௌரவமாகவும் பார்க்கின்றேன்.”  

”எனது குடும்பம், எனது பெற்றோர்கள், எனது சகோதரி, எனது மனைவி மற்றும் எனது பிள்ளைகள் என அனைவரும் எனக்காக வழங்கிய ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னும் எனது நண்பர்களும் முக்கிய தருணங்களில் எனக்கு ஆதரவாக இருந்தனர்.” 

”எனது பயிற்றுவிப்பாளர்கள், ஆசான்கள், இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் எனக்கு இந்த அடைவுமட்டத்திற்காக உதவியதோடு, எனது அணியின் தலைவர்கள், சக வீரர்கள் என அனைவரும் எனது பயணத்தில் ஒரு குடும்பமாக என்னுடன் இணைந்து காணப்பட்டிருந்தனர். இன்னும் என்னுடன் விளையாடிய எதிரணி வீரர்களுக்கும் எனது ஆட்டத்தினை மேம்படுத்த உதவியமைக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.” 

”இன்னும் என்னை இந்த விருதினை வழங்குவதற்கு தெரிவு செய்த ஐ.சி.சி. இன் ”ஹோல் ஒப் பேம் (Hall of Fame)” தேர்வுக்குழுவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”  

1984ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக டெஸ்ட் அறிமுகம் பெற்ற அரவிந்த டி சில்வா, இலங்கை அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி பெறும் போது குறித்த போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 75 ஓட்டங்கள் விளாசி தனது அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

>> அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவிற்கு நீதிமன்ற தடை

இன்னும் 1996ஆம் ஆண்டு இலங்கை தமது கன்னி உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கும் முக்கிய காரணமாக அமைந்த அரவிந்த டி சில்வா 2002ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுத்ததோடு, 2003ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் பிரியாவிடை வழங்கியிருந்தார் 

மொத்தமாக 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் அரவிந்த டி சில்வா 6361 ஓட்டங்களை 42.97 என்கிற சராசரியுடன் பெற்றிருந்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார். அத்துடன் இவர் 308 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9284 ஓட்டங்களோடு 106 விக்கெட்டுக்களையும் சாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<