அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்றார் உமர் குல்

130
Espncricinfo

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்றுவந்த தேசிய T20  கிண்ணத் தொடரில் உமர் குல் விளையாடிய பலோசிஸ்தான் அணி, சௌதெர்ன் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்தப் போட்டியின் பின்னர், உமர் குல் தன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய ரசல், சிம்மண்ஸ், லூவிஸ்

உமர் குல் தன்னுடைய காலப்பகுதியில் மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்திருந்தார். 2007ம் ஆண்டு நடைபெற்ற T20I உலகக் கிண்ணத்தின் போது தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த இவர், 2009ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் போதும் அதிக விக்கெட்டினை கைப்பற்றிய வீரராக இருந்தார். அதுமாத்திரமின்றி 2009ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

அதேநேரம், குறித்த காலப்பகுதியில் சிறந்த யோர்க்கர் பந்துகளை வீசும் வீரர் என்ற அடையாளத்தை பெற்றிருந்த உமர் குல், 2007ம் ஆண்டு T20I உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, தன்னுடைய அதிசிறந்த பந்துவீச்சினையும் பதிவுசெய்திருந்தார். இவர், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக உள்ளார்.

“நான் எனது கழகம், நகரம், மாகாணம் மற்றும் நாட்டுக்காக கடந்த இரண்டு தசாப்தங்களாக பலதரப்பட்ட போட்டிகளில் வியைளாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையை ரசித்திருக்கிறேன். கடினமான உழைப்பு, மரியாதை மற்றும் ஈடுபாட்டினை கிரிக்கெட்டிலிருந்து கற்றுக்கொண்டேன். அதேநேரம், கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு பல வழிகளிலும் பலதரப்பட்டவர்கள் உதவிசெய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும், எனது அணி வீரர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்” என உமர் குல் தனது ஓய்வு குறித்து குறிப்பிட்டார்.

Video – டோனி ஏன் நடராஜனிடம் விக்கெட்டினை கொடுத்தார்? | Cricket Galatta Epi 41

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இதேவேளை, ரசிகர்களுக்கு எனது மிகப்பெரிய நன்றிகளை கூறிக்கொள்ள வேண்டும். என்னை ஊக்கப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு அவர்களுக்கு உண்டு. இறுதியாக, கிரிக்கெட் வாழ்க்கையில் நான் சாதிக்க உதவியதற்காக எனது குடும்பத்தினருக்கு நன்றிகளை கூறிக்கொள்கிறேன். அவர்களுடன் நேரத்தை செலவுசெய்ய என்னால் முடியாவிட்டாலும், இனிவரும் காலத்தில் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். எனினும், தொடர்ந்தும் எனது நாட்டுக்காக கிரிக்கெட்டுடன் தொடர்புடன் இருப்பேன்” என சுட்டிக்காட்டினார். 

உமர் குல் இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மொத்தமாக 125 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 130 ஒருநாள், 47 டெஸ்ட் மற்றும் 60 T20I போட்டிகளில் விளையாடி, முறையே 479, 179, 163 மற்றும் 85 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<