மெதிவ்ஸின் ஓய்வு இலங்கைக்குத் தான் இழப்பு: அரவிந்த

1892

இலங்கை அணி தற்போதுள்ள நிலைமையில் அஞ்செலோ மெதிவ்ஸ் ஓய்வு பெற்றால் அது அணிக்கு மிகப் பெரிய இழப்பாகவும், ஏமாற்றத்தையும் கொடுக்கும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க எதிர்பார்க்கும் மெதிவ்ஸ்

ஆனால் தற்போது இந்தியாவுடனான தொடரில் விளையாடுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

முன்னதாக இலங்கை கிரிக்கெட் சபை வீரர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தத்தை வெளியிட்டது. அதில் வீரர்களுக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு இலங்கை வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் சர்வதேச போட்டிகளிலும் விளையாட மறுப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக பிரச்சினை முடியும் வரை ஒவ்வொரு தொடருக்கும் தனித்தனியாக ஒப்பந்தங்களை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது. 

இந்த நிலையில், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் ஓய்வு பெறுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஆலோசித்து வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியாகியது. 

34 வயதாகும் மெதிவ்ஸ், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்தார். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்றார். 

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவராக மெதிவ்ஸும் காணப்பட்டார். 

எனவே மெதிவ்ஸின் ஓய்வு அறிவிப்பு தொடர்பில் வெளியாகிய இந்த செய்தி இலங்கையில் மிகப் பெரிய பேசும்பொருளாக மாறியது. 

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா, அஞ்nrலோ மெதிவ்ஸின் ஓய்வு தொடர்பில் வெளியாகிய செய்தி மற்றும் அவரது அண்மைக்கால செயல்பாடுகள் குறித்து இந்தியாவின் நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கி இருந்தார். அதில் அவர் கருத்து தெரிவிக்கையில், 

“இந்த நேரத்தில் மெதிவ்ஸ் அணியில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்தால் அது மிகவும் கடினமான நேரமாக இருக்கும். இலங்கை அணிக்கு மிகப் பின்னடைவைக் கொடுக்கும். இலங்கை கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய தியாகங்களையும் சேவையையும் நான் பார்த்திருக்கிறேன்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட காரணங்களுக்காக கிரிக்கெட்டில் இருந்து இவ்வாறு சிரேஷ்ட வீரர்கள் ஓய்வு பெறுவதை நான் விரும்பவில்லை. கிரிக்கெட் மற்றும் ஒப்பந்த பிரச்சினைகள் காரணமாக அது நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை.

இலங்கை வீரர்கள் தங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் மட்டுமின்றி எந்த விளையாட்டிலும் நம்பிக்கையை வளர்ப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். 

நம்பிக்கைகள் இந்த நிலைமையை மாற்றும். நாம் செய்ய வேண்டியது வெற்றி, நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் உலகக் கிண்ணத்தை நோக்கி நகர்வது மட்டுமே” என அவர் தெரிவித்தார். 

இலங்கை அணியில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, டில்ஷான் ஆகியோர் இருந்த போதே அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ் பின்னர் 2017ஆம் ஆண்டு தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். 

இதுவரை அவர் 90 டெஸ்ட் போட்டிகள், 218 ஒருநாள் போட்டிகள் மற்றும் 49 T20 போட்டிகளில் விளையாடி 13,219 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் 191 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

எனவே, இலங்கை அணி தொடர்ச்சியாக சந்தித்து வருகின்ற தோல்விகளுக்கு மத்தியில் மெதிவ்ஸ் போன்ற அனுபவ வீரரையும் இழப்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<