முதல் தடவையாக நடைபெறவுள்ள அனுலா, ரத்னாவலி பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர்

160

“அரசிகளின் சமர்“ என்னும் பெயரில் நுகேகொடை அனுலா வித்தியாலயம் மற்றும் கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரிகளுக்கு இடையே முதற்தடவையாக நடைபெறவிருக்கும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் சமரிற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

மே மாதம் 4 ஆம் திகதி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும் இந்த மாபெரும் கிரிக்கெட் சமரில் 80 ஓவர்கள் (ஒரு நாளில்) வீசப்படவுள்ளதோடு, நேரடியான போட்டி முடிவின் அடிப்படையிலோ அல்லது முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களின் அடிப்படையிலோ போட்டியில் வெற்றிபெறும் அணி தெரிவு செய்யப்படவுள்ளது.

இவ்வருட சமரிற்கு சிங்கர் நிறுவனம் அனுசரனை வழங்கவுள்ளதோடு, போட்டிக்கு விஷேட அதிதியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

“கிரிக்கெட் விளையாட்டின் புனிதத் தன்மையை இலக்காகக் கொண்டு இத்தொடர் விளையாடப்படவுள்ளது. அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மகளிர் பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை விருத்தி செய்து அதன் மூலம் அதில் சிறப்பாக செயற்படும் மாணவிகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம். இப்போட்டியில், பங்கேற்கவுள்ள இரண்டு அணிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்”

என்று, இலங்கை மகளிர் கிரிக்கெட்டிற்கு  தலைவியாக இருக்கும் அப்சரி திலகரத்ன நடைபெறவிருக்கும் இப்போட்டி பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தப் பருவகாலத்திற்கான மகளிர் பாடசாலைகளிற்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் சிங்கர் கிரிக்கெட் தொடரில், இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட நுகேகொடை அனுலா வித்தியாலய அணி, இந்த பெரும் சமரில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுலா வித்தியாலயம் இத்தொடரில், அமாஷா தில்ஷானி மூலம் தலைமை தாங்கி வழிநடாத்தப்படவுள்ளதோடு, உப தலைவியாக சமோதி ஹன்சிக்கா நியமிக்கப்பட்டுள்ளார். சஹன் தேஷப்பிரிய இந்தப் பாடசாலையின் பயிற்சியாளராக செயற்படவுள்ளார்

அனுலா வித்தியாலய மாணவிகளான ஹர்ஷித்தா மாதவி மற்றும் ஹசினி பெரேரா ஆகியோர் அதி குறைந்த வயதில் இலங்கை மகளிர் அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். பாடசாலை அணியில் இடம்பெறும் இவர்கள் இம்மாபெரும் சமரில் தங்களது திறமையை வெளிக்காட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

அதேநேரம் இப்போட்டியில் பங்கேற்கும் மற்றைய கல்லூரியான கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தினை பபசாரி ரணபாகு தலைமை தாங்கவுள்ளார். அவ்வணியின் உப தலைவியாக  திலினி நிவர்த்தன பொறுப்பேற்று இருக்கின்றார். ரத்னாவலி கல்லூரியானது மகளிர் பாடசாலைகள் அணிகளுக்கு இடையிலான இந்த பருவகாலத்திற்கான கிரிக்கெட் தொடரில் இறுதி எட்டு அணிகளுக்குள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமிந்த பெரேரா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தின் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.