இலங்கை கிரிக்கெட் சபையும், IPG நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் இரண்டாவது அத்தியாயம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இந்த ஆண்டு LPL தொடரில் நடப்புச் சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணி, கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடியது.

இதனிடையே, இம்முறை LPL தொடரில் கடந்த ஆண்டைப் போல இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இரண்டாவது முறையாகவும் LPL சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ்

மூன்று தடவைகள் 200 ஓட்டங்கள், ஒரு சதம், 27 அரைச்சதங்கள், 242 சிக்ஸர்கள், 511 பௌண்டரிகள் என பல சாதனைகளும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும் கடந்த இரண்டு வாரங்களில் அரங்கேறின. ஆனாலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் எண்ணிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அதுமாத்திரமின்றி, இம்முறை தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்களில் ஏழு பேர் இலங்கை வீரர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, இம்முறை லங்கா பிரீமியர் லீக் T20 தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் ஐந்து வீரர்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

குசல் மெண்டிஸ் (கோல் கிளேடியேட்டர்ஸ்)

LPL தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இடம்பிடித்தார்.

இம்முறை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்டு மீண்டும் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கோல் அணியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த வீரர்களில் ஒருவராக குசல் மெண்டிஸ் விளங்கினார்.

ஆறு மாத கால போட்டித்தடைக்குப் பின்னர் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கிய அவர், லீக் சுற்று முடிவில் ஒரேயொரு அரைச்சதத்தைப் பெற்று 4ஆவது இடத்தில் இருந்தார். எனினும், பிளே-ஒப் சுற்றின் முதலாவது குவாலிபையரில் பெற்றுக்கொண்ட 85 ஓட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டியில் பெற்றுக்கொண்ட 39 ஓட்டங்கள் மூலம் இம்முறை LPL தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

எதுஎவ்வாறாயினும், இம்முறை LPL தொடரில் வெற்றிகரமான துடுப்பாட்ட வீரராக வலம்வந்த குசல் மெண்டிஸ், தான் விளையாடிய 10 போட்டிகளில் 327 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அத்துடன், ஜப்னா கிங்ஸ் அணிக்கெதிரான முதலாவது குவாலிபையரில் 85 ஓட்டங்களை அதிகபட்சமாக அவர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 36.33 என்ற சராசரியுடன் 32 பௌண்டரிகளையும், 9 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார்.

எதுஎவ்வாறாயினும், ஒழுக்காற்று நடத்தையினால் இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டு 6 மாதங்கள் போட்டித்தடைக்குள்ளாகிய குசல் மெண்டிஸுக்கு மீண்டும் இலங்கை அணியில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த ஆண்டு LPL தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதிலும் குறிப்பாக, அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம் மற்றும் 2023இல் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் முக்கிய வீரராக குசல் மெண்டிஸ் இடம்பிடிக்க வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

அவிஷ்க பெர்னாண்டோ (ஜப்னா கிங்ஸ்)

இம்முறை LPL தொடரில் முதல் சதமடித்தவரும், தனிநபர் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்தவருமான அவிஷ்க பெர்னாண்டோ, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இம்முறை LPL தொடரில் சிறப்பாக விளையாடி ஜப்னா கிங்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இம்முறை LPL தொடரின் லீக் சுற்றின் முடிவில் ஒரேயொரு அரைச்சதத்தை மாத்திரம் பெற்றிருந்த அவிஷ்க பெர்னாண்டோ, தம்புள்ள ஜயண்ட்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் சதமும், கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் அரைச்சதம் ஒன்றையும் அடித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 2ஆவது இடத்திற்கு முன்னேறினார்.

இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் முக்கிய துரும்புச் சீட்டுகளில் ஒருவராக விளங்கிய அவர், 10 போட்டிகளில் விளையாடி 34.66 என்ற சராசரியுடன் 312 ஓட்டங்களைக் குவித்தார்.

பில் சோல்ட் (தம்புள்ள ஜயண்ட்ஸ்)

இம்முறை LPL தொடரில் தசுன் ஷானக தலைமையிலான தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்த ஒரே துடுப்பாட்ட வீரர் தான் பில் சோல்ட்.

அபுதாபி T10 லீக்கில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இம்முறை LPL தொடரில் 301 ஓட்டங்களை எடுத்து இந்த வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தம்புள்ள அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய அவர், 30.10 என்ற சராசரியுடன் ஒரு அரைச்சதம், 10 சிக்ஸர்கள், 32 பௌண்டரிகளை அடித்துள்ளார். இதில் இம்முறை LPL தொடரில் அதிக பௌண்டரிகளை விளாசிய வீரர்களில் குசல் மெண்டிஸுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

எவ்வாறாயினும், அபுதாபி T10 லீக் மற்றும் LPL தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்திய பில் சோல்ட்டை, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20i தொடருக்கான இங்கிலாந்து குழாத்தில் முதல் முறையாக இணைத்துக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

25 வயதான பில் சோல்ட், இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியில் அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டொம் கொஹ்லர் கெட்மோர் (ஜப்னா கிங்ஸ்)

இம்முறை LPL தொடரில் துடுப்பாட்டத்தில் கலக்கிய மற்றுமொரு இங்கிலாந்து வீரர் தான் டொம் கொஹ்லர் கெட்மோர். 27 வயதுடைய வலதுகை துடுப்பாட்ட வீரரான இவர் ஜப்னா கிங்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 32.88 என்ற சராசரியுடன் 296 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

LPL 2021 இல் களமிறங்கும் தமிழ் பேசும் வீரர்கள்

ஜப்னா கிங்ஸ் அணிக்காக இரண்டு அரைச்சதங்களைக் குவித்த அவர், கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் 92 ஓட்டங்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

முன்னதாக, அபுதாபி T10 லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவரும், இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கும் சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் துடுப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

அந்த அணிக்காக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களை எடுத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும், இம்முறை LPL தொடரில் 20 சிக்ஸர்களை விளாசிய டொம் கொஹ்லர் கெட்மோர், அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டார்.

தினேஷ் சந்திமால் (கொழும்பு ஸ்டார்ஸ்)

இம்முறை LPL தொடரில் ஒரு அரைச்சதமும், 3 தடவைகள் 30 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த இலங்கை அணியின் அனுபவ விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

முன்வரிசை வீரராக வலம்வந்த தினேஷ் சந்திமால், இம்முறை LPL தொடரில் பினிஷராக (Finisher) அவதாரம் எடுத்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் முக்கிய வெற்றிகளில் சந்திமாலின் துடுப்பாட்டம் கைகொடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக 9 போட்டிளில் விளையாடிய அவர், 46.16 என்ற சராசரியுடன் 277 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 22 பௌண்டரிகளும், 11 சிக்ஸர்களும் அடங்கும்.

எனவே, இம்முறை LPL தொடரில் பின்வரிசையில் களமிறங்கி துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்த சந்திமாலை எதிர்காலத்தில் இலங்கை அணியில் ஒரு பினிஷராகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் 6 முதல் 10 ஆகிய இடங்கள் வரை முறையே தனுஷ்க குணதிலக்க (226 ஓட்டங்கள்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (207 ஓட்டங்கள்), அஞ்செலோ மெதிவ்ஸ் (191 ஓட்டங்கள்), திசர பெரேரா (190 ஓட்டங்கள்), பானுக ராஜபக்ஷ (179 ஓட்டங்கள்) ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<