தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நிலானி, கயான் புதிய தேசிய சாதனை

182

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு இலங்கை அணிக்காக தெரிவாகியுள்ள வீரர்களின் தகுதியை மீள்பரிசீலனை செய்யும் நோக்கில் நடத்தப்படுகின்ற 96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (03) ஆரம்பமாகியது.

இதில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் நிலானி ரத்னாயக்க மற்றும் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கயான் ஜயவர்தன ஆகியோர் புதிய தேசிய சாதனை நிகழ்த்தியதுடன், ஆண்களுக்கான குண்டு எறிதலில் சமித ஜயவர்தன புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினார்.

சொந்த சாதனையை முறியடித்த நிலானி

நேற்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட நிலானி ரத்னாயக்க, குறித்த போட்டியை 9 நிமிடங்கள் 46.76 செக்கன்களில் ஓடி முடித்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் சுப்பர் 8 சுற்றுக்கு இலங்கை தகுதி

மியன்மாரின் நே – பெய் – தோ (Nay Pyi Taw) நகரில் நகரில் நடைபெற்று வருகின்ற ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் நேற்று (03)…

முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற முன்னோடிப் போட்டியில் அவரால் நிகழ்த்தப்பட்ட (9 நிமிடங்கள் 55.50 செக்கன்கள்) தேசிய சாதனையை அவர் முறியடித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், பெண்களுக்கான தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட சம்பியனும், அண்மையில் பின்லாந்தில் நிறைவுக்கு வந்த 20 வயதுக்கு உட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தேசிய கனிஷ்ட சாதனை படைத்தவருமான 17 வயதுடைய பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, முதல் தடவையாக நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.

நிலானிக்கு பலத்த போட்டியைக் கொடுக்கும் இளம் வீராங்கனை பாரமி வசந்தி

தன்னை விட வயதில் மூத்த வீராங்கனைகளுடன் போட்டியிட்டு சிறந்த முதிர்ச்சி மற்றும் உறுதித் தன்மையை வெளிப்படுத்திய அவர், போட்டியை 10 நிமிடங்கள் 31.16 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், அண்மையில் நடைபெற்ற உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 10 நிமிடங்கள் 20.12 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த பாரமி வசந்தி, தனது சிறந்த காலத்தை பதிவு செய்ததோடு, இலங்கையின் கனிஷ்ட தேசிய சாதனையாகவும் பதிவாகியது.

தட்டெறிதலில் கயான் சாதனை

இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்து கொண்ட கயான் ஜயவர்தன, 56.40 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார். இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இவரும் தனது சொந்த சாதனையை முறியடித்திருந்தார்.

முன்னதாக 2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து நிலைநாட்டப்பட்ட (53.53 மீற்றர்) இந்த சாதனையை சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அவரே நேற்று (03) முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தட்டெறிதலில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண வீரர் ஆஸிக்

இதேநேரம், அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் கயானுக்கு பலத்த போட்டியைக் கொடுத்துவரும் இலங்கை இராணவத்துக்காக விளையாடி வருகின்ற கிழக்கு மாகாண வீரர் Z.T.M ஆஸிக், 45.21 மீற்றர் தூரத்தை எறிந்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக, ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டப் போட்டியில் 42.87 மீற்றர் தூரத்தை எறிந்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட ஆஸிக், அதன் பிறகு கடந்த மே மாதம் நடைபெற்ற இரண்டாம் கட்ட தகுதிகாண் போட்டியில் (42.88 மீற்றர்) முதலிடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சமித்தவின் போட்டி சாதனை

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சமித்த ஜயவர்தன, போட்டி நிகழ்ச்சிக்கான புதிய போட்டி சாதனையை நிகழ்த்தினார்.

இவர், குறித்த போட்டியில் 16.23 மீற்றர் தூரம் குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.

கனிஷ்ட மெய்வல்லுனர் வீரர்களுக்கு 2024 ஒலிம்பிக் வரை விஷேட கொடுப்பனவு

ஜப்பானின் கிபு நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் …

இப்போட்டியில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஜே.டி பெரேரா, 15.67 மீற்றர் தூரம் குண்டை எறிந்து இரண்டாவது இடத்தையும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எஸ்.எம் பெர்னாண்டோ 15.04 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

100 மீற்றரில் தமிழ் பேசும் வீரர்களுக்கு வெற்றி

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்ட குழாமில் இடம்பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ள 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளின் தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

இதில் அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை அணிக்காக பல்வேறு வெற்றிகளை பெற்று வருகின்ற வினோஜ் சுரன்ஜய டி சில்வா, டெங்குக் காய்ச்சல் காரணமாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. அதேபோன்று, இத்தாலியில் வசித்து வருகின்ற மற்றுமொரு குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இதில் பங்கேற்கவில்லை.

ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியின் போது

இதேவேளை, இன்று (04) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வீரர்கள் பெற்றுக்கொள்ளும் நேரப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டே இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் 4 x 100 அஞ்சலோட்ட அணியை பங்குகொள்ள செய்வதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனரில் மலையக வீரர் சண்முகேஸ்வரனுக்கு தங்கப் பதக்கம்

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான …

கனிஷ்ட வீரர்கள் அபாரம்

இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர், தெற்காசிய மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள், 20 வயதுக்கு உட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர்களில் ஆண்களுக்கான 400 மீற்றர் மற்றும் 4 x 400 அஞ்சலோட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பதிவு செய்த பாடசாலை வீரர்களான அருண தர்ஷன மற்றும் பசிந்து கொடிக்கார ஆகியோர் முதல்  தடவையாக சிரேஷ்ட வீரர்கள் பலர் கலந்துகொள்கின்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் களமிறங்கினர்.

400 மீற்றர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அருண மற்றும் பசிந்து

இதில் நேற்றைய தினம் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதி சுற்றுகள் நடைபெற்றன. இதன் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கலந்து கொண்ட அருண தர்ஷன, போட்டித் தூரத்தை 46.88 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தையும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கலந்து கொண்ட பசிந்து கொடிக்கார, போட்டியை 46.65 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தையும் பெற்று இன்று நடைபெறவுள்ள (04) இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றனர்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<