பயிற்சிப் போட்டி துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை வீரர்கள்

Sri Lanka tour of England 2024

71

 சுற்றுலா இலங்கை கிரிக்கெட் மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில், இலங்கை துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காண்பித்துள்ளது.  

>> ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் பெதும் நிஸ்ஸங்க முன்னேற்றம்

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட முன்னர் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி மோதல் ஒன்றில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் ஆடுகின்றது 

இந்தப் பயிற்சிப் போட்டியானது நேற்று (14) வோர்கேஸ்டரில் ஆரம்பமாகியதோடு, போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட இங்கிலாந்து லயன்ஸ் அணி மூலம் இலங்கை வீரர்கள் பணிக்கப்பட்டனர் 

அதன்படி துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை வீரர்கள் இங்கிலாந்து லயன்ஸின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தினை சந்தித்தனர். இதனால் ஆரம்பம் முதலே தடுமாறிய இலங்கை வீரர்கள் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர் 

இலங்கை துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களை திமுத் கருணாரட்ன 26 ஓட்டங்களுடன் பதிவு செய்தார். மறுமுனையில் இங்கிலாந்து லயன்ஸ் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான ஷமான் அக்தார் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஜோஸ் ஹல் 3 விக்கெட்டுக்களை சுருட்டினார் 

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணியானது முதல் ஆட்ட நிறைவில் 145 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் பென் மெக்கினி அதிகபட்சமாக 46 ஓட்டங்களை எடுத்திருந்தார் 

மறுமுனையில் இலங்கைப் பந்துவீச்சிற்காக பிரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<