நீண்ட இடைவேளைக்கு பிறகு மே.தீவுகள் ஒரு நாள் குழாத்தில் ரசல்

231
Andre Russell

பங்களாதேஷ் அணிக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி கயானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில், அதிரடி சகலதுறை வீரர் அன்ரே ரசல் கிட்டத்தட்ட 3 வருட காலப்பகுதிக்கு பின்னர் இணைக்கப்பட்டுள்ளார்.

ஹோல்டரின் மிரட்டும் பந்துவீச்சால் பங்களாதேஷுக்கு தொடர் தோல்வி

அணித் தலைவர் ஜேசன் ஹோல்டரின் மற்றொரு மிரட்டும் பந்துவீச்சின் உதவியோடு…

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 22 ஆம் திகதி கயானாவில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை 13 பேர் கொண்ட அணிக் குழாத்தின் விபரத்தை வெளியிட்டுள்ளது. இதில் முக்கிய மாற்றமாக அன்ரே ரசலின் ஒரு நாள் போட்டிகளுக்கான மீள்வருகை குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது.

சர்வதேச T-20 கிரிக்கெட் தொடர்களை பொருத்தவரையில், அன்ரே ரசல், உலகளாவிய ரீதியில் உள்ள அணிகளால் எதிர்பார்க்கப்படும் ஒரு வீரராக மாறியுள்ளார். குறிப்பாக ஐ.பி.எல் தொடங்கி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் லீக் வரை ரசலுக்கு மதிப்பு அதிகம்.

எனினும், தொடர்ச்சியாக அவரது காலில் ஏற்பட்டு வரும் உபாதை மற்றும்  விதிக்கப்பட்டிருந்த ஒருவருட தடை என்பவை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரசலை தூரத்தள்ளி வைத்திருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அன்ரே ரசல் மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன்போது உலக ஊக்கமருந்துக்கு எதிர்ப்பு பணியகம் ரசலிடம், அவரது இருப்பிடம் தொடர்பான தகவல் அடங்கிய கடிதம் ஒன்றினை தங்களுக்கு அனுப்பிவைக்குமாறு கோரியிருந்தது. எனினும் ரசல் குறித்த தகவலை மூன்று முறை வழங்க மறுத்த காரணத்திற்காக அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வருடம் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

குளோபல் T20 கிண்ணம் கிறிஸ் கெய்லின் வான்கூவர் நைட்ஸ் அணிக்கு

கனடா கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்த கனடா குளோபல் T20 கிரிகெட் தொடரின்..

தடைக்கு பின்னர் அன்ரே ரசல் இவ்வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடியிருந்தாலும், மேற்கிந்திய தீவுகளுக்காக ஒரே ஒரு சர்வதேச T-20  போட்டியில் மாத்திரமே விளையாடியுள்ளார். இங்கிலாந்து – லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக பதினொருவர் அணிக்கு எதிரான கண்காட்சிப் போட்டியில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரசல் 21 ஓட்டங்களை பெற்றதுடன், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

அன்ரே ரசல் இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் மாத்திரம் விளையாடியதுடன், காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக முழு தொடரிலிருந்தும் வெளியேறினார். இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இவர் 24 பந்துகளுக்கு 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். தொடர்ந்து உபாதைக்கு முகங்கொடுத்த ரசல், ஒரு வருடத் தடைக்கு முகங்கொடுக்க நேரிட்டதும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்து, மீண்டும் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் ரசல் மீண்டும் ஒருநாள் குழாத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை  தொடர்பில் அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டுவர்ட் லோவ், “அன்ரே ரசல் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சிக்குறிய செய்தி. ரசலின் அதிரடி பலம் மற்றும் அவரது ஆற்றல், அணிக்குழாத்தை ஏற்கனவே ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என பதிவிட்டார்.

பக்ஹர் சமானின் அசத்தல் சதத்துடன் இலகு வெற்றிபெற்ற பாகிஸ்தான்

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் புலவாயோ சர்வதேச கிரிக்கெட்…

இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக் குழாத்தில் பல மாற்றங்களை கிரிக்கெட் சபை ஏற்படுத்தியுள்ளது. இதில் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடிய கார்லோஸ் பிராத்வைட், செல்டொன் கொட்ரெல், நிகிடா மில்லர், கீமார் ரோச், மார்லன் சாமியல்ஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இடத்துக்கு அல்ஷாரி ஜோசப், கீரன் பவெல் மற்றும் அன்ரே ரசல் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), தேவேந்திர பிசூ, கிரிஸ் கெயில், ஷிம்ரோன் ஹெட்மைர், சாய் ஹோப், அல்ஷாரி ஜோசப், எவின் லிவிஸ், ஜேசன் மொஹமட், அஸ்லி நேர்ஷ், கீமோ பௌல், கீரன் பவெல், ரோவ்மன் பவெல், அன்ரே ரசல்