இரண்டாம் சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்தது CR&FC

143
Air Force SC v CR&FC

டயலொக் ரக்பி லீகின் 2 ஆம் சுற்றிற்கான போட்டியொன்றில் CR&FC மற்றும் விமானப்படை அணிகள் மோதிக் கொண்டன. ரத்மலான விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் விமானப்படை அணியை தோற்கடித்த CR&FC அணி, 34 – 22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

முதலாம் சுற்றில் CR&FC அணியிடம் பாரிய புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிக் கொண்ட விமானப்படை அணி இம்முறை முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் களமிறங்கியது.

விமானப்படை விளையாட்டுக் கழகம் போட்டியை தொடக்கி வைத்ததுடன், முதல் பாதியின் ஆரம்பத்தில் CR&FC அணியே ஆதிக்கம் செலுத்தியது. 5 ஆவது நிமிடத்தில் கிடைத்த ஸ்க்ரம் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட CR&FC அணியின் 8 ஆம் இலக்க வீரர் ஓமல்க குணரத்ன போட்டியின் முதல் ட்ரையை வைத்தார். பிரின்ஸ் சாமர கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (CR&FC 05 – விமானப்படை 00)

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய CR&FC அணி வீரர்கள் சில நிமிடங்களின் பின்னர் மற்றுமொரு ட்ரையின் மூலமாக புள்ளிகளை இரட்டிப்பாக்கினர். நடுக்கள நிலை வீரர் பானுக நாணயக்கார இந்த ட்ரையை பெற்றுக் கொண்டதுடன், இம்முறையும் கொன்வெர்சன் உதை தவறவிடப்பட்டது. (CR&FC 10 – விமானப்படை 00)

ஆரம்பத்தில் தடுப்பாட்டத்தில் சில தவறுகளை விட்ட போதிலும், சில நிமிடங்களின் பின்னர் அதிரடியான தாக்குதல் ஆட்டத்தை வெளிக்காட்டிய விமானப்படை அணி கயந்த இத்தமல்கொட மற்றும் S. பாடபெடிகே ஆகியோரின் ஊடாக அடுத்தடுத்து இரண்டு ட்ரைகள் வைத்து அசத்தியது. இரண்டு உதைகளையும் நுவன் பெரேரா தவறவிட, புள்ளிகள் சமனாகின. (CR&FC 10 – விமானப்படை 10)

CR&FC அணி வீரர்கள் வேகமான ஓட்டம் மூலம் எதிரணியின் தடுப்பை மீறி முன்னேறுவதில் சிறந்து காணப்பட்ட போதிலும், கவனக்குறைவான பந்துக் கைமாற்றல்களினால் சில வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. எவ்வாறாயினும் முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் தரிந்து ரத்தவத்த வலப்பக்க மூலையில் ட்ரை வைத்தார். கடினமான கொன்வெர்சன் உதையை பிரின்ஸ் சாமர லாவகமாக உதைத்தார். (CR&FC 17 – விமானப்படை 10)

முதல் பாதி: CR&FC 17 – விமானப்படை 10

முதற் பாதியை போன்றே இரண்டாம் பாதியிலும் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொண்ட CR&FC அணி, ஆட்டம் ஆரம்பித்து வெறும் 45 வினாடிகளில் ட்ரை வைத்து எதிரணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முன்வரிசை வீரர்களின் உதவியுடன் விங் நிலை வீரர் கவிந்து பெரேரா ட்ரை வைத்ததுடன், இம்முறையும் கடினமான உதையை பிரின்ஸ் சாமர வெற்றிகரமாக உதைத்தார். (CR&FC 24 – விமானப்படை 10)

தாக்குதல் ஆட்டம் மற்றும் தடுப்பாட்டம் என இரண்டிலுமே ஆக்ரோஷமாக திறமையை வெளிப்படுத்திய CR&FC போட்டியை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தது. எனினும் விதிமுறை மீறல் காரணமாக CR&FC வீரர் சுபுன் பீரிஸிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதால், அடுத்த 10 நிமிடங்களுக்கு 14 வீரர்களுடன் விளையாடிய வேண்டிய நிலைக்கு அவ்வணி தள்ளப்பட்டது. இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட விமானப்படை அணி பலமிக்க முன்வரிசை வீரர்களைக் கொண்டு  ‘ரோலிங் மோல்’ மூலம் ட்ரை கோட்டை நெருங்கியது. சில கைமாற்றல்களின் பின்னர் விங் நிலை வீரர் இஷார மதுஷான் ட்ரை வைத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தார். சரித செனவிரத்ன கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (CR&FC 24 – விமானப்படை 15)

விமானப்படை வீரர்கள் தொடர்ந்து உத்வேகமான ஆட்டத்தின் மூலம் எதிரணிக்கு அழுத்தம் வழங்கிய போதிலும், விவேகமான நகர்வு ஒன்றின் மூலமாக எதிரணியிடமிருந்து பந்தை தட்டிப்பறித்த ஓமல்க குணரத்ன விங் வீரர் கவிந்து பெரேராவிற்கு பந்தை பரிமாற்ற, அவர் தனது இரண்டாவது ட்ரையை வைத்து CR&FC அணியின் புள்ளி எண்ணிக்கையை மேலும் அதிகரித்தார். கொன்வெர்சன் உதை தவறவிடப்பட்டது. (CR&FC 29 – விமானப்படை 15)

போட்டியின் 64 ஆவது நிமிடத்தில் வெற்றியை உறுதி செய்து கொண்ட CR&FC அணி, முன்வரிசை வீரர் கோகில சம்மந்தப்பெருமவின் ஊடாக ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டது. இம்முறை இலகுவான உதையை பிரின்ஸ் சாமர தவறவிட்ட போதிலும், CR&FC அணியின் வெற்றி உறுதியானது. (CR&FC 34 – விமானப்படை 15)

போட்டியின் இறுதி கட்டத்தில் CR&FC அணி வீரர்கள் களைப்பின் காரணமாக சற்று மந்தமான தடுப்பாட்டத்தில் ஈடுபட, விமானப்படை விளையாட்டுக் கழகம் சில சிறப்பான நகர்வுகளின் பின்னர் திலின பண்டாரவின் ஊடாக ஆறுதல் ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டது. நுவன் பெரேரா வெற்றிகரமாக உதைத்ததுடன் போட்டி நிறைவுக்கு வந்தது. (CR&FC 34 – விமானப்படை 22)

முழு நேரம்: CR&FC 34 – விமானப்படை 22

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ஓமல்க குணரத்ன

புள்ளிகளைப் பெற்றோர்

CR&FC அணி – 34

ட்ரை – கவிந்து பெரேரா 2T, ஓமல்க குணரத்ன 1T, பானுக நாணயக்கார 1T, கோகில சம்மந்தப்பெரும 1T

கொன்வெர்சன் – பிரின்ஸ் சாமர 2C

விமானப்படை அணி – 22

ட்ரை – கயந்த இத்தமல்கொட 1T, S. பாடபெடிகே 1T, இஷார மதுஷான் 1T

கொன்வெர்சன் – நுவன் பெரேரா 1C

WATCH MATCH REPLAY