பக்ஹர் சமானின் அசத்தல் சதத்துடன் இலகு வெற்றிபெற்ற பாகிஸ்தான்

183

ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் புலவாயோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் மற்றும் 84 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை அவர்களது சொந்த மைதானத்தில் 107 ஓட்டங்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் அணி 201 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சொந்த மண்ணில் சவால் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும், தொடரை சமப்படுத்திய வேண்டி முக்கியத்துவத்திலும் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

2018ஆம் ஆண்டின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியை ருசித்தது பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணியின் தலைவரான ஹெமில்டன் மசகட்சா அணியில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்த விரும்பாத நிலையில், இறுதி போட்டியில் விளையாடிய அதே பதினொருவருடன் களமிறங்க, பாகிஸ்தான் அணியும் மாற்றங்கள் இன்றி களம் நுழைந்தது. கடைசிப் போட்டியை போன்று குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டுவிடக்கூடாது என்ற நோக்கில் ஜிம்பாப்வே அணி களமிறங்கினாலும், அதற்கான வாய்ப்புகளை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் தகர்த்தெறிந்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பிரைன் சாரி ஒரு ஓட்டம் மற்றும் சமு சிபஹபஹா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அணியை ஏமாற்றினர். முதல் இரண்டு விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் வீழ்த்தினார்.

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் ஹெமில்டன் மசகட்சா மற்றும் டரிசாய் முசகண்டா ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டியெழுப்பினர். மூன்றாவது விக்கட்டுக்காக 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள முசகண்டா 24 ஓட்டங்களுடன் ஹசன் அலியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணியின் தலைவர் மசகட்சா ஷுஐப் மலிக்கின் பந்து வீச்சில் 59 ஓட்டங்களுடன் வெளியேற ஜிம்பாப்வே அணி தடுமாறியது.

தொடர்ந்து வருகைதந்த வீரர்களில் பீட்டர் மூர் மாத்திரம் 86 பந்துகளி்ல் அரைச்சதத்தை (50) கடக்க, ஏனைய வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து ஓய்வறை திரும்பினர். அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய உஸ்மான் கான் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த ஜிம்பாப்வே அணி 49.2 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 195 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இந்த இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்ஹர் சமானின் அதிரடி சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க வெற்றியிலக்கை 36 ஓவர்களில் கடந்து இலகு வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் பக்ஹர் சமானுடன் இணைந்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த  இமாம் உல் அக் அரைச்சதத்தை நெருங்கிய போதும், 44 ஓட்டங்களுடன் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். எனினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பக்ஹர் சமான் 129 பந்துகளை எதிர்கொண்டு 16 பௌண்டரிகள் அடங்கலாக 117 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அவருடன் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த பாபர் அசாம் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

கனிஷ்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு வட மாகாணத்திலிருந்து வீரர்கள் தெரிவு

முதல் போட்டியை போன்று மீண்டும் மோசமான துடுப்பாட்டத்தையும், பந்து வீச்சையும் வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-2 என பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தொடரின் தோல்வியிலிருந்து மீளுவதற்கு ஜிம்பாப்வே அணி எதிர்வரும் 18ஆம் திகதி புலவாயோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டும்.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 194 (49.2) – ஹெமில்டன் மசகட்சா 59(75), பீட்டர் மூர் 50(86), உஸ்மான் கான் 4/36, ஹசன் அலி 3/32

பாகிஸ்தான் – 195/1 (36) – பக்ஹர் சமான் 117(129), இமாம் உல் அக் 44(51)

முடிவு – பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகன் – பக்ஹர் சமான்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<