ஆசிய கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள்

Asia Cup 2022

368
Top 5 highest run scorers in Asia Cup history

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரின் 15ஆவது அத்தியாயம் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இம்முறை போட்டித் தொடருக்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருவதுடன், ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை நடைபெற்ற 14 ஆசியக் கிண்ண அத்தியாயங்களில் 13 ஒருநாள் தொடராகவே நடத்தப்பட்டுள்ளது. எனினும், T20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ணம் T20 வடிவில் நடைபெற்றது. அதேபோல, இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இம்முறை ஆசியக் கிண்ணமும் T20 வடிவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆசியக் கிண்ணத்தின் நடப்பு சம்பியனான இந்தியா ஏழு தடவையும், இலங்கை ஐந்து தடவையும், பாகிஸ்தான் இரண்டு தடவையும் ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில், 1984 முதல் 2018 வரை நடைபெற்று முடிந்த 14 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் யார்? துடுப்பாட்டத்தில் சாதனை படைத்த வீரர்கள் யார்? என்பது பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்.

சனத் ஜயசூரிய (இலங்கை)

ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் இலங்கையின் அதிரடி மன்னன் சனத் ஜயசூரிய. இவர் 1990-2008 வரையான காலப்பகுதியில் 25 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 24 இன்னிங்ஸ்களில் 1220 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். 53.04 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் முதலிடம் வகிக்கின்ற சனத் ஜயசூரியவின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 130 ஆகும்.

மேலும், 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் 5 போட்டிகளில் விளையாடி 378 ஓட்டங்களைக் குவித்த அவர், குறித்த தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் மாறியிருந்தார். இதில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரைச் சதமும் அடங்கும்.

அதுமாத்திரமின்றி, 1997, 2004 மற்றும் 2008 ஆகிய மூன்று ஆசியக் கிண்ண சம்பியன் பட்டங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதில் சனத் ஜயசூரிய முக்கிய பங்கு வகித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குமார் சங்கக்கார (இலங்கை)

ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இலங்கையின் மற்றுமொரு நட்சத்திர வீரரான குமார் சங்ககார உள்ளார். விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான இவர் 24 ஆசியக் கிண்ண போட்டிகளில் விளையாடி 1,075 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவருடைய துடுப்பாட்ட சராசரி 48.86 ஆக உள்ளது. ஆசிய கிண்ணத்தில் 4 சதங்கள் மற்றும் 8 அரைச் சதங்களை அடித்துள்ள சங்கக்கார 121 ஓட்டங்களை அதிகபட்சமாக அடித்துள்ளார்.

குமார் சங்கக்கார 2004 முதல் 2014 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இதில் 2004, 2008 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அணி சம்பியனாகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அதேபோல, ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்களில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். 1990 முதல் 2012 வரையான காலப்பகுதியில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 971 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 7 அரைச் சதங்கள் அடங்கும். அவருடைய அதிகபட்ட ஓட்ட எண்ணிக்கை 114 ஆக உள்ளது.

அத்துடன், 1995ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் அவர் மாறியிருந்தார்.

அதுமாத்திரமின்றி, 2012ஆம் ஆண்டு மிர்பூரில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார். இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவரது 100ஆவது சதமாக இடம்பிடித்தது.

இதனிடையே, 1991 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கரும் ஒரு உறுப்பினராக இருந்தார். எனினும், 2010 இலங்கையில் வைத்து இந்திய அணி ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றினாலும், அந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொஹைப் மலிக் (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் அணியின் அனுபவ சகலதுறை வீரரான சொஹைப் மலிக், இதுவரை 21 போட்டிகளில் விளையாடி 907 ஓட்டங்களைக் குவித்து இந்த விசையில்ர 4ஆவது இடத்தில் உள்ளார். அவருடைய துடுப்பாட்ட சராசரி 64.78 ஆக உள்ளது. அத்துடன் 3 சதங்கள் மற்றும் 4 அரைச் சதங்களை அடித்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 143 ஆகும்.

அத்துடன், 2004ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரில் 316 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

40 வயதான சொஹைப் மலிக், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், T20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றார். எனினும், இம்முறை ஆசியக் கிண்ண பாகிஸ்தான் குழாத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ரோஹித் சர்மா (இந்தியா)

ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா உள்ளார். 2008 முதல் ஆசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடி வருகின்ற இவர், இதுவரை 27 போட்டிகளில் விளையாடி 883 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 7 அரைச் சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக இவர் 111 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

முன்னதாக 2010 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் இந்திய அணியின் தலைவராகச் செயல்பட்டு அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்குவகித்த ரோஹித் சர்மாவுக்கு ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம் வருகின்ற சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடிக்க இன்னும் 337 ஓட்டங்களே தேவைப்படுகின்றன.

இதேவேளை, ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 2 சாதனைகளை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது. இம்முறை போட்டித் தொடரில் களமிறங்குவதன் மூலம் ரோஹித் சர்மா, அதிக முறை ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இந்த நிலையில், ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சஹீட் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார். இவர் 27 போட்டிகளில் விளையாடி 26 சிக்ஸர்களை அப்ரிடி அடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2ஆவது இடத்தில் இலங்கை வீரர் சனத் ஜயசூரிய 25 போட்டிகளில் 23 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா 3ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் 27 போட்டிகளில் விளையாடி 21 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதனால் இந்தப் பட்டியலில் முதலிடத்திற்கு வருவதற்கு ரோஹித் சர்மாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் குறைந்தபட்சம் 6 சிக்ஸர் அடித்தாலே புதிய சாதனையை படைப்பார்.

இது இவ்வாறிருக்க, ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 6 முதல் 10 வரையான இடங்களில் விராட் கோஹ்லி (766 ஓட்டங்கள்), அர்ஜுன ரணதுங்க (741 ஓட்டங்கள்), முஷ்பிகுர் ரஹீம் (739 ஓட்டங்கள்), எம்.எஸ் டோனி (690 ஓட்டங்கள்), மஹேல ஜயவர்தன (674 ஓட்டங்கள்) ஆகிய வீரர்கள் உள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<