ஷெசாத், குல்பதீன் அபாரம்: அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

164

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி நேற்று (21) நடைபெற்றது. இப்போட்டியில் மொஹமட் ஷெசாத்தின் அபாரம் சதம், நஜீபுல்லாஹ் சத்ரான் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட அரைச் சதம் மற்றும் குல்பதீன் நயீப்பின் மிரட்டல் பந்துவீச்சினால் 126 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 1-1 என சமப்படுத்தியது.

உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக ஐக்கிய இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

மார்க் அடைரின் அபார பந்துவீச்சில் ஆப்கானை வீழ்த்தியது அயர்லாந்து

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெல்பாஸ்ட்டில் …….

இந்த நிலையில், பெல்பாஸ்ட் நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற நம்பிக்கையோடு நேற்று நடைபெற்ற இரண்டாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அயர்லாந்து அணி, நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, துடுப்பாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 25 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டினை பறிகொடுத்தபோதும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொஹமட் ஷெசாத் மற்றும் ரஹ்மத் ஷாஹ் ஜோடி 150 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் ஆரம்பம் முதல் அயர்லாந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்த மொஹமட் ஷெசாத், ஒரு நாள் போட்டிகளில் தான் பதிவு செய்த ஆறாவது சதத்தோடு, 16 பௌண்டரிகளுடன் 88 பந்துகளில் 101 ஓட்டங்களை குவித்தார். இதேநேரம், ரஹ்மத் ஷாஹ் 14ஆவது ஒரு நாள் அரைச் சதத்தோடு ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தொடர்ந்து அவ்வணியின் மத்திய வரிசை விக்கெட்டுக்கள் குறைந்த ஒட்டங்களுக்கு சரிந்தாலும் நஜீபுல்லாஹ் சத்ரான் கடைசி வரை நிலைத்து நின்று 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று வலுச்சேர்த்தார்.

இதன்படி, ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களைப் எடுத்தது.

இதேவேளை அயர்லாந்த அணியின் பந்துவீச்சு சார்பில் மார்க் அடைர் 3 விக்கெட்டுக்களையும், அண்டி மெக்பிரைன் 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாகக் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து 306 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அயர்லாந்து அணியின் போல் ஸ்டேர்லிங், ஜேம்ஸ் மெக்கலம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இதில் ஜேம்ஸ் மெக்கலம் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அண்டி போல்பேர்னி 20 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந்த நிலையில் 50 ஓட்டங்களை பெற்றிருந்த போல் ஸ்டேர்லிங் குல்பதீன் நயீப்பின் பந்தில் ரஷித் கானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அயர்லாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென்று சரிய ஆரம்பித்தது.  

தொடர்ந்து எதிரணயின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய அயர்லாந்து அணி, 41.2 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 126 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அணித் தலைவர் குல்பதீன் நயீப் 43 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பிரதீப்பின் அபார பந்துவீச்சோடு ஸ்கொட்லாந்துடனான ஒரு நாள் தொடர் இலங்கை வசம்

Welcome to ThePapare Cricket Stats Center………….

போட்டியின் தொடர் நாயகன் விருது அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான போல் ஸ்டேர்லிங்கிற்கு வழங்கப்பட்டது.

இதன்படி, ஸ்கொட்லாந்துடனான ஒருநாள் தொடரை 1-0 எனவும், அயர்லாந்துடனான ஒருநாள் தொடரை 1-1 எனவும் சமப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, இம்முறை உலகக் கிண்ணத்திற்கான பலமிக்க அணியாக களமிறங்கவுள்ளது. அத்துடன், உலகக் கிண்ணத் தொடரின் தமது முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை ஜூன் மாதம் 01ஆம் திகதி அவ்வணி எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 305/7 (50) – மொஹமட் ஷெசாத் 101, ரஹ்மத் ஷாஹ் 62, நஜீபுல்லாஹ் சத்ரான் 60*, மார்க் அடைர் 3/71, அண்டி மெக்பிரைன் 2/43

அயர்லாந்து – 179 (48.5) – போல் ஸ்டேர்லிங் 50, கெரி வில்சன் 34, குல்பதீன் நயீப் 6/43

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 126 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<