உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அஞ்சலோட்ட அணி

World Athletics Championship 2023

90

ஹங்கேரியின் ‘புடாபேஸ்ட்’ நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அஞ்சலோட்ட அணி உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்ற பதிவை நிலைநாட்டியுள்ளது.

இலங்கை 4×400 மீட்டர் அஞ்சலோட்ட அணி தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷப்பில் பங்குகொண்டு 3 நிமிடங்கள் 01.56 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றது. இதன்மூலம் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான அணிகள் தரப்பத்தலில் 12ஆவது இடத்தை பிடிக்க முடிந்தது.

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டிக்கு முதல் 16 இடங்களில் உள்ள அணிகளே தகுதி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அருண தர்ஷன, ராஜித ராஜகருணா, பபசர நிகு மற்றும் காலிங்க குமாரகே ஆகிய நான்கு வீரர்களுமே ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தனர். அதேபோல, மேலதிக வீரராக பசிந்து கொடிகார அணியில் இடம்பிடித்திருந்தார்.

இதனிடையே, கடந்த வாரம் சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் போட்டியிட்ட இதே அஞ்சலோட்ட அணி இந்திய அணியுடன் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

புடாபேஸ்ட் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 4×400 மீட்டர் அஞ்சலோட்ட அணி தவிர இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். எனினும், தற்போது உபாதையால் அவதியுற்று வரும் அவர், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டு, சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளதாக யுபுன் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவதற்கான கால அவகாசம் கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், இலங்கையின் ஒருசில வீரர்களுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இலங்கை பெண்களுக்கான ஈட்டி எறிதல் வீராங்கனை நதீஷா லேகம்கே பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் உலக தரவரிசையில் 37ஆவது இடத்தில் உள்ளார். எவ்வாறாயினும், உலக சம்பியன்ஷிப்ப தொடருக்கு முதல் 36 இடங்களில் உள்ள வீரர்களுக்கு மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் நதீஷாவிற்கு நேரடி தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும், அமெரிக்கா வீராங்கனையான காரா விங்கர், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஓய்வு பெற்றார். இதன்காரணமாக Wild Card மூலம் இலங்கை வீராங்கனை நதீஷா லெகாம்கேவிற்கு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறுவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சனிக்கிழமை (5) உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

அதேபோல, இலங்கையின் மத்திய தூர மெய்வல்லுனர் வீராங்கனை கயந்திகா அபேரத்ன உலக தரவரிசையில் 58ஆவது இடத்தில் உள்ளார். எவ்வாறாயினும், 1500 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு முதல் 56  வீராங்கனைகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் கயன்திகாவிற்கு உலக மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

 >>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<