தீவிரவாத குண்டுத் தாக்குதலால் உயிரிழந்த ஆப்கான் நடுவர்

186

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நடுவரான பிஸ்மில்லாஹ் ஜான் ஷின்வாரி, அந்நாட்டில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் அணிக்கான சர்வதேச போட்டிகள் உட்பட, 2017ம் ஆண்டு நடைபெற்ற காஷி அமானுல்லாஹ் கான் பிராந்திய ஒருநாள் தொடர், 2017-18 பருவகாலத்துக்கான அஹமட் ஷாஹ் அப்தாலி நான்கு நாள் போட்டித் தொடர் போன்றவற்றில் பிஸ்மில்லாஹ் ஜான் ஷின்வாரி நடுவராக கடமையாற்றியுள்ளார்.

>>ஐ.பி.எல் வரலாற்று சாதனையை முறியடித்த எம்.எஸ் டோனி<<

இந்தநிலையில், நேற்றைய தினம் (03) ஆப்கானிஸ்தானின் நன்கஹார் மாகாணத்தில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் பிஸ்மில்லாஹ் ஜான் ஷின்வாரி உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஊடகங்களின் செய்திகளின் படி, நன்கஹார் மாகாணத்தின், கானிக்ஹில் மாவட்ட ஆளுநரின் வளாகத்தில் நேற்று (03) தீவிரவாத தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்கதலில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போதே, ஜான் ஷின்வாரி உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்த தீவிரவாத தாக்குதலின் போது, சில தீவிரவாதிகள் கானிக்ஹில் மாவட்ட ஆளுநர் வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் உள்நுழைய முற்பட்ட போதும், அவர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், போட்டி வர்னணையாளருமான டீன் ஜோன்ஸ், ஐ.பி.எல். தொடரின் வர்னணைக்காக வருகைத்தந்திருந்த போது, மாரடைப்பால் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த இழப்பாக பிஸ்மில்லாஹ் ஜான் ஷின்வாரி உயிரழப்பு பதிவாகியுள்ளது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<