அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி T20I உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குழு A யில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியானது முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
>> தமிழ் யூனியன் கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய டில்ருவன்
ஐசிசி T20I உலகக்கிண்ணத்துக்கான தகுதிகாண் தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை, ஜிம்பாப்வே அணி வீழ்த்தியிருந்ததுடன் T20I உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றின் குழு Bயில் இடத்தை பிடித்துக்கொண்டது. குறிப்பிட்ட இந்த குழுவில் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளும் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளன.
ஐசிசி T20I உலகக்கிண்ணமானது ஒக்டோபர் 16ம் திகதி முதல் நவம்பர் 13ம் திகதிவரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதன் முதல் சுற்றுப்போட்டிகள் ஹோபர்ட் மற்றும் ஜீலோங்கில் நடைபெறவுள்ளன.
முதல் சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணியானது நமீபியா அணியை ஒக்டோபர் 16ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், 18ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் அணியையும், 22ம் திகதி நெதர்லாந்து அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.
முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த பின்னர் சுபர் 12 சுற்றுக்கான போட்டிகள் ஒக்டோபர் 22ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. சுபர் 12 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் தங்களுடைய குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துக்கொள்ளும் அணிகள், சுபர் 12 சுற்றுக்கான தகுதியை பெற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<