ஐ.பி.எல் வரலாற்று சாதனையை முறியடித்த எம்.எஸ் டோனி

297
Image courtesy : Iplt20.com

13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உபதலைவர் சுரேஷ் ரெய்னா விளையாடாத நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி, சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். 

2020ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் ரசிகர்கள் இன்றிய மூடிய மைதானத்தில் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் குறித்த தொடரில் விளையாடிவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உபதலைவர் சுரேஷ் ரெய்னா, இவ்வருட ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் தொடரிலிருந்து முழுமையாக விலகி நாடு திரும்பியிருந்தார்.

கோலி, ரெய்னாவின் சாதனைப்பட்டியலில் இணைந்த ரோஹித் சர்மா!

சுரேஷ் ரெய்னா 2008ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையான 12 வருட காலப்பகுதியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் (சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து நீக்கப்பட்ட வேளையில் உருவான அணி) அணிகளில் மொத்தமாக 193 போட்டிகளில் விளையாடி அதிக இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாடிய வீரராக சாதனை படைத்தார்.

இந்நிலையில் 2020 ஐ.பி.எல் தொடரின் 14ஆவது லீக் போட்டி நேற்று (02) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைஸஸ் ஹைதராபாத் மற்றும் எம்.எஸ் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 7 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ் டோனி நேற்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை 194ஆவது போட்டியில் களமிறங்கிய எம்.எஸ் டோனி முறியடித்தார்.

தோல்வியை தழுவிய டெல்லி அணிக்கு அபராதம் விதிப்பு !

2008ஆம் ஆண்டிலிருந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டுவரும் எம்.எஸ் டோனி, ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நீக்கப்பட்ட வேளையில் ரைஸிங் பூனே சுப்பர்ஜெயின்ட்ஸ் அணியின் தலைவராகவும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று தன் சாதனையை முறியடித்த எம்.எஸ் டோனிக்கு சுரேஷ் ரெய்னா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்ததாக மூன்றாமிடத்தில் காணப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹிட் சர்மா 192 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இவ்வருட பருவகாலத்திற்கான தொடரில் சுரேஷ் ரெய்னா பங்கேற்காத நிலையில் இன்னும் 2 போட்டிகளில் ரெய்னாவின் சாதனையை ரோஹிட் சர்மாவும் முறியடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்கள் பட்டியல்

01) எம்.எஸ் டோனி (2008-2020) 194 போட்டிகள் (சென்னை சுப்பர் கிங்ஸ், ரைஸிங் பூனே சுப்பர்ஜெயின்ட்ஸ்)

02) சுரேஷ் ரெய்னா (2008-2020) – 193 போட்டிகள் (சென்னை சுப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ்)

03) ரோஹிட் சர்மா (2008-2020) – 192 போட்டிகள் (டெக்கான் சார்ஜஸ், மும்பை இந்தியன்ஸ்)

04) தினேஷ் கார்த்திக் (2008-2020) – 185 போட்டிகள் (டெல்லி டெயார் டெவில்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்)

05) விராட் கோஹ்லி (2008-2020) – 180 போட்டிகள் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்ள்ளூர்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<