Home Tamil சரித் அசலன்கவின் ஆட்டத்தோடு ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை

சரித் அசலன்கவின் ஆட்டத்தோடு ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை

1945

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> தொடரினை சமநிலைப்படுத்துமா இலங்கை கிரிக்கெட் அணி?

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 1-1 என சமநிலை செய்திருக்கின்றது.

முன்னதாக கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமான இந்தப்  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருந்தனர்.

இந்த ஒருநாள் தொடரில் ஆப்கான் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி தனன்ஞய லக்ஷானிற்குப் பதிலாக துனித் வெலால்கே அணிக்குள் இணைக்கப்பட, லஹிரு குமாரவின் இடத்தினை அசித பெர்னாண்டோ பெற்றிருந்தார். மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் சுழல்பந்துவீச்சாளரான நூர் அஹ்மட்டுக்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் வழங்கியிருந்தது.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, அசித பெர்னாண்டோ

ஆப்கானிஸ்தான் XI

ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), நஜிபுல்லா சத்ரான், மொஹமட் சத்ரான், மொஹமட் நபி, முஜிபுர் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி, நூர் அஹ்மட்

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு கசுன் ராஜித மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் நெருக்கடி வழங்கிய போதும், அவ்வணியின் நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான இப்ராஹிம் சத்ரான் மற்றும் நஜிபுல்லா சத்ரான் ஜோடி பொறுப்புடன் ஆடி ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கியது.

>> இங்கிலாந்தின் 14 வீரர்களுக்கு திடீர் சுகயீனம் ; முதல் போட்டி நடக்குமா?

இந்த இரண்டு வீரர்களும் அரைச்சதம் விளாசியதோடு ஆப்கானிஸ்தான் அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 154 ஓட்டங்களை இணைப்பாட்டமாகவும் பெற்றனர். அத்துடன் அது ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் நான்காம் விக்கெட்டுக்கு பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாகவும் மாறியது. தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்த வனிந்து ஹஸரங்க, நஜிபுல்லா சத்ரானின் விக்கெட்டினைக் கைப்பற்றினார். நஜிபுல்லா சத்ரான் தன்னுடைய 15ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 76 பந்துகளில் 77 ஓட்டங்கள் பெற்றார்.

பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தமது பிந்தைய விக்கெட்டுக்களை பறிகொடுத்து சற்று தடுமாறிய போதும், களத்தில் இருந்த இப்ராஹிம் சத்ரான் அபாரமான முறையில் சதம் விளாசியதோடு ஆப்கான் அணியினையும் வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 313 ஓட்டங்கள் எடுத்தது. ஆப்கான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இப்ராஹிம் சத்ரான் தன்னுடைய 3ஆவது ஒருநாள் சதத்துடன், தன்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸினையும் பதிவு செய்து 138 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 15 பௌண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் இது ஆப்கானிஸ்தான் அணிக்காகவும்,  பல்லேகல சர்வதேச மைதானத்திலும் வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளின் இன்னிங்ஸ் ஒன்றில் எடுத்த கூடுதல் ஓட்டங்களாகவும் மாறியது.

இலங்கை பந்துவீச்சு சார்பில் கசுன் ராஜித 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 314 ஓட்டங்களை அடைய பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க ஜோடி சிறந்த ஆரம்பத்தை வழங்கியது.

>> இங்கிலாந்தின் 14 வீரர்களுக்கு திடீர் சுகயீனம் ; முதல் போட்டி நடக்குமா?

குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஜோடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 101 ஓட்டங்கள் பெற்றதோடு, இந்த இணைப்பாட்டத்தினை தொடர்ந்து இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மொஹமட் நபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் தன்னுடைய 20ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு ஒரு சிக்ஸர் மற்றும் 8 பெளண்டரிகள் உடன் 61 பந்துகளுக்கு 67 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின்னர் ரஷீட் கானின் அபார பந்துவீச்சு காரணமாக இலங்கை அணி பெதும் நிஸ்ஸங்க, அவரை அடுத்து களம் நுழைந்த தனன்ஞய டி சில்வா ஆகியோரின் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இதில் பெதும் நிஸ்ஸங்க 3 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களோடு வெளியேற, தனன்ஞய டி சில்வா 05 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார்.

எனினும் இலங்கை அணியின் நான்காம், ஐந்தாம் விக்கெட்டுக்களுக்காக சரித் அசலன்கவுடன் இணைந்து தினேஷ் சந்திமால் மற்றும் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் சிறந்த இணைப்பாட்டங்களை உருவாக்கியிருந்தனர். இந்த இணைப்பாட்டங்களில் தினேஷ் சந்திமால் 48 ஓட்டங்களை சரித் அசலன்கவுடன் பகிர்ந்து ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதேவேளை அணித்தலைவர் தசுன் ஷானக்க ரஷீட் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க முன்னர் இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக 79 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு 44 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை எடுத்தார்.

தசுன் ஷானக்கவினை அடுத்து புதிய வீரராக வந்த வனிந்து ஹஸரங்கவின் விக்கெட்டினையும் ரஷீட் கான் அவர் 02 ஓட்டங்களை மாத்திரம் எடுத்த நிலையில் கைப்பற்ற இலங்கை அணி 249 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் சரித் அசலன்க, துனித் வெல்லாலகே உடன் இணைந்து தன்னுடைய அபார அரைச்சதத்துடன் போராடி இலங்கை அணியினை போட்டியின் வெற்றியாளர்களாக மாற்றினார்.

>> இங்கிலாந்தின் 14 வீரர்களுக்கு திடீர் சுகயீனம் ; முதல் போட்டி நடக்குமா?

இறுதியில் அசலன்கவின் போராட்டத்தோடு இலங்கை கிரிக்கெட் அணி 49.4 ஓவர்களில் மேலதிக விக்கெட் இழப்பின்றி (6 விக்கெட்டுக்களை இழந்து) போட்டியின் வெற்றி இலக்கினை 314 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது.

இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்த சரித் அசலன்க தன்னுடைய ஆறாவது ஒருநாள் அரைச்சதத்துடன் 72 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்கள் பெற, துனித் வெல்லாலகே 21 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 31 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

மறுமுனையில் ஆப்கான் பந்துவீச்சு சார்பில் ரஷீட் கான் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்தும், மொஹமட் நபி 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகிது.

போட்டியின் ஆட்டநாயகனாக சரித் அசலன்க தெரிவாக தொடர் நாயகன் விருது ஆப்கான் வீரர் இப்ராஹிம் சத்ரானுக்கு வழங்கப்பட்டது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க << 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
314/6 (49.4)

Afghanistan
313/8 (50)

Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz b Kasun Rajitha 5 12 1 0 41.67
Ibrahim Zadran c Pathum Nissanka b Asitha Fernando  162 138 15 4 117.39
Rahmat Shah c Kusal Mendis b Kasun Rajitha 22 30 4 0 73.33
Hashmatullah Shahidi lbw b Dhananjaya de Silva 4 10 0 0 40.00
Najibullah Zadran c Dasun Shanaka b Wanidu Hasaranga 77 76 8 1 101.32
Mohammad Nabi c Pathum Nissanka b Wanidu Hasaranga 12 12 1 0 100.00
Gulbadin Naib run out (Maheesh Theekshana) 8 11 0 0 72.73
Rashid Khan c Dinesh Chandimal b Kasun Rajitha 13 10 1 0 130.00
Noor Ahmad not out 2 1 0 0 200.00


Extras 8 (b 1 , lb 3 , nb 0, w 4, pen 0)
Total 313/8 (50 Overs, RR: 6.26)
Bowling O M R W Econ
Kasun Rajitha 10 0 60 3 6.00
Maheesh Theekshana 7 0 46 0 6.57
Dunith Wellalage 4 0 25 0 6.25
Asitha Fernando  10 1 64 1 6.40
Dhananjaya de Silva 8 0 42 1 5.25
Wanidu Hasaranga 10 0 67 2 6.70
Dasun Shanaka 1 0 5 0 5.00


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka b Rashid Khan 35 55 3 0 63.64
Kusal Mendis c Rashid Khan b Mohammad Nabi 67 61 8 1 109.84
Dinesh Chandimal b Mohammad Nabi 33 32 2 1 103.12
Dhananjaya de Silva b Rashid Khan 5 11 1 0 45.45
Charith Asalanka not out 83 72 5 4 115.28
Dasun Shanaka b Rashid Khan 43 44 5 0 97.73
Wanidu Hasaranga c Rahmanullah Gurbaz b Rashid Khan 2 3 0 0 66.67
Dunith Wellalage not out 31 21 4 1 147.62


Extras 15 (b 0 , lb 1 , nb 1, w 13, pen 0)
Total 314/6 (49.4 Overs, RR: 6.32)
Bowling O M R W Econ
Fazal Haq Farooqi 9.4 0 70 0 7.45
Mujeeb ur Rahman 10 0 70 0 7.00
Gulbadin Naib 6 0 48 0 8.00
Mohammad Nabi 10 0 56 2 5.60
Rashid Khan 10 0 37 4 3.70
Noor Ahmad 4 0 32 0 8.00