தொடரினை சமநிலைப்படுத்துமா இலங்கை கிரிக்கெட் அணி?

176

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (30) கண்டி நகரில் நடைபெறுகின்றது.

களநிலவரங்கள்

இலங்கை அணி பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியே மழையினால் கைவிடப்பட்டது, ஆப்கானிஸ்தான் அணி தொடரில் 1-0 முன்னிலை பெற்றது என்பன ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் அணிக்கு இந்த தொடரில் சிக்கலைத் தோற்றுவித்திருக்கின்றன.

ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த கய்க்வாட்

மறுமுனையில் 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு இன்னும் ஒரு அணி மாத்திரமே நேரடி தகுதி பெற முடியும் என்பதனால் மூன்றாவது ஒருநாள் போட்டி உட்பட, ஒருநாள் சுபர் லீக்கின் எஞ்சிய போட்டிகள் அனைத்திலும் சிறந்த பதிவினைக் காட்ட வேண்டிய அழுத்தமும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு காணப்படுகின்றது.

இதேவேளை இரண்டாவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதியினைப் பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் இதுவரை அதிக நன்மைகளைப் பெற்றுக் கொண்ட  அணியாக காணப்படுகின்றது.

அத்துடன் முழுமையான போட்டி ஒன்றினை பார்க்க மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறும் கண்டி நகரில் நாளை மழை அற்ற ஒரு வானிலையும் இருக்க வேண்டும்.

இலங்கை அணி

மூன்றாவது ஒருநாள் போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் முதல் போட்டியில் ஆடிய அதே அணியிலேயே மாற்றங்களின்றி களமிறங்கியது.  இரண்டாவது போட்டியில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மிலான் ரத்நாயக்க ஆடுவார் என கூறப்பட்ட போதும் அது நடைபெற்றிருக்கவில்லை.

உலகக் கிண்ணத்துக்கு ஆப்கான் நேரடி தகுதி; இலங்கைக்கு சிக்கல்!

ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒரு மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அதாவது துனித் வெலால்கே தனன்ஞய லக்ஷானுக்குப் பதிலாக களமிறக்கப்பட எதிர்பார்க்க முடியும்.

இருக்கும் வீரர்களில் இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் நம்பிக்கை சேர்த்த பெதும் நிஸ்ஸங்க மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் முன்வரிசையில் களமிறங்கும் குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க போன்ற வீரர்கள் முதல் போட்டியில் செய்த அதே தவறினை செய்யாது மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.

பென் ஸ்டோக்ஸின் போட்டி வருமானம் பாகிஸ்தான் மக்களுக்கு

இலங்கை அணியின் பந்துவீச்சினைப் பொறுத்தவரை கசுன் ராஜித இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அதேநேரம் வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன மற்றும் லஹிரு குமார ஆகியோரும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். எனவே இவர்கள் அதே போன்ற பந்துவீச்சினை மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெளிப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றனர்.

எதிர்பார்ப்பு XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, லஹிரு குமார

ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணி எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடக் கூட ஒரு அணியாக இந்த ஒருநாள் தொடரில் அமைந்திருக்கவில்லை. இலங்கை பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தும் துடுப்பாட்டவீரர்கள், திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள், சுழல்பந்துவீச்சாளர்கள் என சிறந்த ஒரு அணியாகவே காணப்படுகின்றது. ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்கள் சிறிய தடுமாற்றம் ஒன்றினைக் காட்டிய போதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அது சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கான் அணியின் நம்பிக்கை வீரர்களான ரஷீட் கான், முஜிபுர் ரஹ்மான் போன்றோர் இன்னும் இந்த தொடரில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் மூன்றாவது ஒருநாள் போட்டி மூலம் தமக்குரிய இறுதி வாய்ப்பினை உபயோகம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் அணியில் இருக்கும் துடுப்பாட்டவீரர்களில் ரஹ்மானுல்லா குர்பாஸ் கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் விளாசி திறமையினை நிரூபித்திருப்பதோடு, ரஹ்மத் சாஹ்வும் துடுப்பாட்டத்தில் தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தார். எனவே மாற்றங்கள் இன்றிய ஆப்கான் அணியினை மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்ப்பு XI

ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), நஜிபுல்லா சத்ரான், மொஹமட் சத்ரான், மொஹமட் நபி, முஜிபுர் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி, யமின் அஹ்மட்சாய்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<