இலகு வெற்றியை சுவீகரித்த DHT, மாஸ் சிலுயேட்டா அணிகள்

149

பெயார் என்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) இன் அனுசரணையோடு இடம்பெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு – B இன் மட்டுப்படுத்தப்பட்ட   ஓவர்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

DHT சீமெந்து எதிர் யுனிலிவர் லங்கா

BRC மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் DHT சீமெந்து நிறுவன அணியினர், யுனிலிவர் லங்காவினை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய யுனிலிவர் லங்கா நிறுவனத்தின் வீரர்களுக்கு, எதிரணியின் கவிந்து பண்டார மற்றும் திலான் நிமேஷ் ஆகிய பந்து வீச்சாளர்கள் மிகவும் நெருக்கடி தர 24 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த யுனிலிவர் லங்கா வெறும் 98 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

யுனிலிவர் லங்கா அணி சார்பாக அதிகபட்சமாக திலான் சுரவீர 23 ஓட்டங்களை பெற்றிருந்த அதேவேளையில், DHT நிறுவன பந்து வீச்சில் திறமையினை வெளிக்காட்டிய கவிந்து பண்டார 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், திலான் நிமேஷ் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 11 இலங்கை வீரர்கள்

ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில்…

இதனை தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 99 ஓட்டங்களினை பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய DHT சீமெந்து நிறுவன அணி தொடர்ந்து தடுமாற்றத்தினை வெளிக்காட்டியிருந்த போதிலும் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 101 ஓட்டங்களுடன் வெற்றியிலக்கினை அடைந்தது.

DHT அணியின் துடுப்பாட்டத்தில் போராட்டத்தினை காட்டியிருந்த தினேத் திமோத்யா 40 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு பெறுமதி சேர்த்திருந்தார். அதேபோன்று யுனிலிவர் லங்கா அணியில் பந்து வீச்சில் ஜொலித்த யொமேஷ் ரணசிங்க 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

யுனிலிவர் லங்கா – 98 (24) திலான் சுரவீர 26, கவிந்து பண்டார 3/16, திலான் நிமேஷ் 2/25

DHT சீமெந்து – 101/7 (19.3) தினேத் திமோத்யா 40, யொமேஷ் ரணசிங்க 3/20


கொமர்ஷல் கிரடிட் எதிர் மாஸ் சிலுயேட்டா

மக்கோன சர்ரேய் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியில் மாஸ் சிலுயேட்டா நிறுவன அணி, கொமர்ஷல் கிரடிட் நிறுவன அணியை டக்வெத் லூயிஸ் முறையில் 6 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது.

மோசமான காலநிலை காரணமாக அணிக்கு 21 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாஸ் சிலுயேட்டா நிறுவனம் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கொமர்ஷல் கிரடிட் வீரர்கள் 21 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். கொமர்ஷல் கிரடிட் அணி சார்பாக அதிகபட்சமாக அகீல் இன்காம் 30 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார். அதேபோன்று மாஸ் சிலுயேட்டாவின் பந்து வீச்சில் நிமந்த மதுசங்க மற்றும்  கெளசல்யா கஜசிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

ரெட்புல் பல்கலைக்கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள்

தொடர்ந்து, வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 107 ஓட்டங்களை பெற தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மாஸ் சிலுயேட்டா 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கினை அடைந்தது. இதில் மாஸ் சிலுயேட்டா அணியினை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்ற கெளசல்யா கஜசிங்க துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு  30 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

மோசமான பந்து வீச்சினை கொமர்ஷல் கிரடிட் அணி வெளிப்படுத்தியிருந்தும் அவ்வணியின் தனோஷ் டி சில்வா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கொமர்ஷல் கிரடிட் – 106/9 (21) அகீல் இன்காம் 30, சனித்த டி மெல் 25, அனுர டயஸ் 25, நிமந்த மதுசங்க 2/10, கெளசல்யா கஜசிங்க 2/5

மாஸ் சிலுயேட்டா – 107/4 (15.4) கெளசல்யா கஜசிங்க 30*, தனோஷ் டி சில்வா 2/17