விறுவிறுப்பான முறையில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்தன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்

ஐ.பி.எல் தொடரின் நடப்புச் சம்பியனான ஹைதராபாத் அணியினர் பலமிக்க வீரர்களினை கொண்ட நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியிருந்த இப்போட்டி கொல்கத்தாவில் தொடங்கியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியினைப் பற்றிக்கொண்ட சன் ரைஸர்ஸ் அணி எதிரணிக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில் களமிறங்கியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முதல் விக்கெட்டாக சுனில் நரேன் 6 ஓட்டங்களுடன் புவனேஸ்வர் குமாரின் மிதமிஞ்சிய பந்து வீச்சு மூலம் போல்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அணித்தலைவர் கௌதம் கம்பீரும் 15 ஓட்டங்களுடன் நடையைக்கட்ட சற்று தடுமாற்றத்தினை கொல்கத்தா அணி எதிர்கொண்டது. எனினும், ரொபின் உத்தப்பா மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் அதிரடியாக ஆடி வாணவேடிக்கைகளை காட்டியதுடன் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையையும் வலுவான நிலைக்கு கொண்டு சேர்த்தனர்.

இதில் உத்தப்பா தனது 18ஆவது ஐ.பி.எல் அரைச் சதத்தினை பூர்த்தி செய்ததுடன் மொத்தமாக 39 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களை விளாசியிருந்ததார். அத்தோடு மனீஷ் பாண்டே 35 பந்துகளுக்கு 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இவர்களின் சிறப்பாட்டத்துடன் 20 ஓவர்கள் நிறைவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சில் வலதுகை வேகப் பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து பதிலுக்கு 173 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை எட்ட தயரான வோர்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் அணியிக்கு நல்ல தொடக்கம் அமைந்திருந்தது.

எனினும், தொடர்ச்சியாக எதிரணியை கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசிய சுனில் நரேன் மற்றும் இளம் இடது கை சுழல் வீரர் குல்தீப் யாதவ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சினால் 20 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களினை மாத்திரமே ஹைதராபாத் அணியினரால் பெற முடிந்தது.

இதனால் 17 ஓட்டங்களால் போட்டியின் வெற்றியை தமது சொந்த மைதானத்தில் வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றுக்கொண்டது.

ஹைதராபாத் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மத்திய வரிசையில் ஆடிய யுவராஜ் சிங் 16 பந்துகளுக்கு 26 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோக்ஸ் அதிக ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு, சுனில் நரேன், குல்தீப் யாதவ், யுசுப் பதான் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோரும் ஆளுக்கொரு விக்கெட்டாக பங்கிட்டிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 172/6 (20) – ரொபின் உத்தப்பா 68(39), மனீஷ் பாண்டே 46(35), யுசுப் பதான் 21*(15), புவனேஸ்வர் குமார் 20/3 (4)

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் – 155/6 (20) – யுவராஜ் சிங் 26(16), டேவிட் வோர்னர் 26(30), கிரிஸ் வோக்ஸ் 49/2 (4)

முடிவு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 17 ஓட்டங்களால் வெற்றி


டெல்லி டேர்டெவில்ஸ் எதிர் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டெல்லி மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் 51 ஓட்டங்களால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி பஞ்சாப் அணியினை வீழ்த்தியிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த டெல்லி அணி, இங்கிலாந்து அணியின் சேம் பில்லிங்ஸ் பெற்றுக்கொண்ட அதிரடி அரைச்சதத்துடன் நல்லதொரு ஆரம்பத்தினைப் பெற்றது.

பில்லிங்ஸ் மொத்தமாக 40 பந்துகளில் 9  பவுண்டரிகளை விளாசி 55 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனையடுத்து, ஒரு நாள் போட்டிகளில் அதிகுறைந்த பந்துகளுக்கு சஹீத் அப்ரிடியினால் அடிக்கப்பட்டிருந்த சதச் சாதனையினை நீண்ட காலத்திற்கு பின்னர் முறியடித்த நியூசிலாந்தின் கோரி அன்டர்சன் அதிவிரைவாக துடுப்பாடி 22 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களினை சேர்த்தார்.

இதனால் முடிவில் 20 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களினை டெல்லி அணி பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் பஞ்சாப் மோசமாக செயற்பட்டிருந்த போதும் வருண் ஏரொண் மொத்தமாக 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

இதனையடுத்து சவால் மிக்க வெற்றி இலக்கான 189 ஓட்டங்களினை பெற  பதிலுக்கு ஆடிய கிளேன் மெக்ஸ்வேல் தலைமயிலான பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 137 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று 51 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பஞ்சாப் அணியின் சார்பாக ஏனைய வீரர்கள் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிக்காட்டியிருந்த நிலையில் அக்ஸார் பட்டேல் 29 பந்துகளிற்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 44 ஓட்டங்களினைப் பெற்று தனது போராட்டத்தினை வெளிக்காட்டியிருந்தார்.

பந்து வீச்சில், எதிரணிக்கு அழுத்தம் தந்த கிரிஸ் மொரிஸ் 23 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, சபாஸ் நதீம் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியதோடு முன்னர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அண்டர்சன் ஒரு விக்கெட்டினை சாய்த்து  டெல்லி அணியின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

டெல்லி டேர்டெவில்ஸ் – 188/6 (20) – சேம் பில்லிங்ஸ் 55(40), கோரி அன்டர்சன் 39*(22), வருண் ஏரோண் 45/2(4)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 137/9 (20) – அக்ஸார் பட்டேல் 44(29), டேவிட் மில்லர் 24(28), கிரிஸ் மொரிஸ் 23/3(4), பேட் கம்மின்ஸ் 23/2(4), சபாஷ் நதீம் 13/2(2)

முடிவு – டெல்லி டேர்டெவில்ஸ் 51 ஓட்டங்களால் வெற்றி