பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் 4 வருடங்களின் பின் இணையும் நட்சத்திர வீரர்

662

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரசாக் சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷ் டெஸ்ட் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 3ஆவது தடவையாகவும் மாற்றியமைக்கப்பட்ட டெஸ்ட் அணிக் குழாமை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நேற்று(28) அறிவித்துள்ளது.

இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு

கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல..

அவ்வணியின் நட்சத்திர வீரரும், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் முதல் புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டவருமான சகிப் அல் ஹசன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முற்பட்ட வேளையிலே மைதானத்தில் விழுந்து உபாதைக்குள்ளானார்.    

கைவிரலில் ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவருக்கு எதிர்வரும் 3 வாரங்களுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து சகிப் அல் ஹசன் விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக அனுபவமிக்க வீரரான 35 வயதுடைய அப்துர் ரசாக்கை அணியில் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அப்துர் ரசாக் கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இறுதியாக விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து சுமார் 4 வருடங்களாக அவர் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்களாதேஷ் அணிக்காக விளையாடவில்லை.

ஒழுக்க விதிமுறைகளை மீறிய இலங்கை வீரருக்கு கடும் எச்சரிக்கை

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில்..

எனினும், தற்போது நடைபெற்று வருகின்ற பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வருகின்ற அப்துர் ரசாக், பங்களாதேஷ் அணி சார்பில் முதற்தர போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையையும் கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

அத்துடன், கடந்த பருவகாலத்தில் 9 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 40 விக்கெட்டுக்களையும் அவர் கைப்பற்றியிருந்தார். 2006ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அப்துர் ரசாக், இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

எனினும், பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களைக்(244) கைப்பற்றிய வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற அப்துர் ரசாக், எந்தவொரு உடற்தகுதி பரிசோதனைகளுக்கும் முகங்கொடுக்காமல் நேரடியாக டெஸ்ட் குழாமுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம் பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் 94 விக்கெட்டுக்களை வீழ்த்தி 2ஆவது இடத்தில் உள்ள மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான சுன்சமுல் இஸ்லாம் மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான தன்பிர் ஹைதர் ஆகியோரையும் முதற்தடவையாக டெஸ்ட் அணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

முன்னதாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் கடந்த 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இம்முறையும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஸ்டோக்ஸ்

கோடைகாலத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக..

இதில் 4 முதல்தரப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள, தற்போது நியூசிலாந்தில் நடைபெற்றுவருகின்ற, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடிய 17 வயதான வலதுகை சுழற்பந்து வீச்சாளரான நயீம் ஹசன் முதற்தடவையாக பங்களாதேஷ் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  

இதேநேரம், தற்போது நடைபெற்றுவருகின்ற பங்களாதேஷ் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்ற சகலதுறை ஆட்டக்காரரான மொசாதிக் ஹொசைன் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸ் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  

இதேவேளை சகிப் அல் ஹசன் உபாதைக்குள்ளாகியுள்ளதால் பங்களாதேஷ் அணியை மஹமதுல்லா ரியாத் வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான பங்களாதேஷ் குழாம்

மஹ்முதுல்லா ரியாத்(தலைவர்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், மொஸாதிக் ஹொசைன், தஜிஉல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், கம்ருல் இஸ்லாம் ரப்பி, மெஹிதி ஹசன் மீராஸ், ருபெல் ஹொசைன், சுன்சமுல் இஸ்லாம், தன்பிர் ஹைதர், நயீம் ஹசன்