கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க அணியுடனான தொடரையடுத்து பல அதிர்ச்சியான முடிவுகளையும் சந்திக்க நேரிட்டது. இதில் அவ்வணியின் வெற்றிக்காக அரும் பணியாற்றி வந்த தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் திடீர் பதவி விலகலானது அவ்வணியை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியது.

[rev_slider LOLC]

எனினும், 2018ஆம் ஆண்டில் அவ்வணி பங்கேற்ற முதல் தொடராக இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடர் தற்போது நடைபெற்று வருவதுடன், நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்நிலையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் இன்று (26) அறிவிக்கப்பட்டது.

இதில் 4 முதல் தரப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள 17 வயதான வலதுகை சுழல் பந்துவீச்சாளரான நயீம் ஹசன் முதற்தடவையாக பங்களாதேஷ் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தற்போது நியூசிலாந்தில் நடைபெற்றுவருகின்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர் பங்களாதேஷ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இந்திய இளையோர் அணிக்கெதிராக இன்று நடைபெற்ற தீர்மானமிக்க உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் அவர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

அதிரடி வெற்றியுடன் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

முன்னதாக கடந்த வருட இறுதியில் மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடியிருந்த நயீம் ஹசன், மலேஷியாவுடனான போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெஸ்ட் குழாமுக்கு முதற்தடவையாக இளம் வீரர் நயீம் ஹசன் அழைக்கப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு தெரிவுக்குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஆப்டீன் கருத்து வெளியிடுகையில், ”தற்போது நடைபெற்றுவருகின்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடி வருகின்ற நயீம் ஹசனை மேலதிக சுழல் பந்துவீச்சாளராக டெஸ்ட் அணிக்கு அழைத்துள்ளோம். அவருடைய அண்மைக்கால திறமைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம். எனவே பங்களாதேஷ் அணிக்கு அவருடைய பங்களிப்பு உதவியாக இருக்கும் என நாம் நம்புகிறோம். எனவே இந்திய அணியுடனான காலிறுதிப் போட்டிக்குப் பிறகு அவர் நாடு திரும்பவுள்ளார்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அவ்வணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் மேற்பார்வையின் கீழ் பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் அண்மைக்காலமாக தொடர்ந்து விளையாடி வந்த அனுபவமிக்க ஒரு சில வீரர்களுக்கு டெஸ்ட் குழாமில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியில் இடம்பெற்றிருந்த சுபாசில் ரோய், சௌமியா சர்கார், சபிர் ரஹ்மான், சபியுல் இஸ்லாம் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகியோரை பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இருந்து நீக்குவதற்கு அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீரர்களில் சுபாசில் ரோய் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகியோர் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் போது சிறப்பாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தற்போது நடைபெற்றுவருகின்ற பங்களாதேஷ் உள்ளுர் போட்டிகளில் விளையாடி வருகின்ற சகலதுறை ஆட்டக்காரரான மொசாதிக் ஹொசைன் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். முன்னதாக அவர் பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், கடந்த வருடம் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸ் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும், தற்போது நடைபெற்று வருகின்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் உபாதை காரணமாக விளையாடாமல் இருந்த இம்ருல் கைஸ், முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இலங்கை அணியுடன் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கான பங்களாதேஷ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை அணிக்கெதிராக இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் அணித்தலைவராக சகலதுறை வீரர் சகிப் அல் ஹசனை மீண்டும் நியமிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த மாதம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி பங்களாதேஷ் அணியின் 9ஆவது தலைவராக சகீப் அல் ஹசன் செயற்படவுள்ளார்.

இளையோர் உலகக் கிண்ண பிளேட் இறுதிப்போட்டியில் இலங்கை

முன்னதாக, கடந்தவருட முற்பகுதியில் இலங்கை அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தின் போது பங்களாதேஷ் டி20 அணியின் தலைவராகச் செயற்பட்ட மஷ்ரபி முர்தசா, டி20 அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து சகீப் அல் ஹசனை டி20 அணித் தலைவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

சகலதுறை வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கின்ற 30 வயதான சகீப் அல் ஹசன், இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3594 ஓட்டங்களையும், 188 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2009 முதல் 2011 வரையான காலப்பகுதியில் பங்களாதேஷ் அணியின் தலைவராகக் கடமையாற்றிய சகிப் அல் ஹசன், குறித்த காலப்பகுதியில் 9 போட்டிகளுக்கு மாத்திரம் தலைமை தாங்கிய அவர், மேற்கிந்திய தீவுகளுடனான போட்டித் தொடரை மாத்திரம் வெற்றிகொண்டார். எனினும், 2011இல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பெற்றுக்கொண்ட தோல்வியினை அடுத்து அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதேவேளை பங்களாதேஷ் அணியின் உபதலைவர் பதவியிலிருந்த தமீம் இக்பால் நீக்கப்பட்டு, அவரின் இடத்துக்கு மஹமதுல்லா ரியாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் டெஸ்ட் குழாம்

சகிப் அல் ஹசன் (தலைவர்), மஹ்முதுல்லா ரியாத் (உபதலைவர்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், இம்ருல் கைஸ், மொமினுல் ஹக், மொஸாதிக் ஹொசைன், தஜிஉல் இஸ்லாம், முஸ்தபிசூர் ரஹ்மான், கம்ருல் இஸ்லாம் ரப்பி, மெஹிதி ஹசன் மீராஸ், ருபெல் ஹொசைன், நயீம் ஹசன்