இலங்கை கால்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய FIFA உடன் புதிய கூட்டு திட்டம்

1

இலங்கையின் கால்பந்தாட்டத்தை எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நாட்டின் மிகவும் பிரபல விளையாட்டாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள பரந்த அளவிலான அபிவிருத்தித் திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக, ஃபீஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ஆகியோரை அசர்பைஜானின் பாகு நகரில் சந்தித்துப் பேசினார். 

இச்சந்திப்பின் போது, இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் இளைஞர் அணிகளின் வளர்ச்சிக்கு ஃபீஃபா வழங்கி வரும் விரிவான ஆதரவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை கால்பந்தாட்டம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், நாடு முழுவதும் கால்பந்தாட்டத்தை மேலும் வேகமாகவும் பரவலாகவும் அபிவிருத்தி செய்வதற்கு ஃபீஃபா மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். 

இலங்கை கால்பந்தாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த ஃபீஃபாவின் அர்ப்பணிப்பை அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீண்டும் உறுதி செய்தார். இலங்கையில் சர்வதேச தரத்திலான நவீன கால்பந்து மைதானம் ஒன்றை அமைப்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தியதுடன், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் நான்கு ஆண்டு அபிவிருத்தி சுழற்சியில் தேசிய அணி, இளைஞர் அணிகள், மகளிர் கால்பந்தாட்ட அணி, பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களின் வளர்ச்சிக்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஃபீஃபா எதிர்பார்க்கிறது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்பந்து மைதானங்கள் 

நாடு முழுவதும் கால்பந்து உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக பிரதான திட்டமொன்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்கீழ், அடுத்த ஆண்டு முதல் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்பந்து மைதானங்களை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. 

இத்தொலைநோக்கு பார்வைக்கு அமைவாக, 2031 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற லீக் சங்கங்கள் மூலம் சுமார் 40 கால்பந்து மைதானங்களை அபிவிருத்தி செய்ய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கால்பந்தாட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும். 

தேசிய உயர்செயல்திறன் மையம் (National High-Performance Centre) 

இலங்கையில் தேசிய உயர்செயல்திறன் மையம் ஒன்றை நிறுவுவது குறித்த முன்மொழிவு தொடர்பாகவும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்துடனான கூட்டாண்மையின் மூலம், முன்மொழியப்பட்ட இம்மையத்திற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆதரவை இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்க ஃபீஃபா உறுதுணையாக இருக்கும். 

வீரர்களின் திறமைகளை மேம்படுத்துதல், பயிற்சித் தரங்களை உயர்த்துதல் மற்றும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் திறமையான இலங்கை வீரர்களுக்கு சர்வதேசத்தின் மிகயுயர் மட்டங்களை எட்டுவதற்கான தொழில்முறை பாதையை உருவாக்குவதில் இம்மையம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை கால்பந்தாட்டத்தில் ஒரு புதிய சகாப்தம் 

இந்தக் கலந்துரையாடலானது இலங்கை அரசாங்கம், ஃபீஃபா மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவை இணைந்து தேசிய மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான படியாகும். கால்பந்தாட்டத்தில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, விளையாட்டு உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டுத் தரத்தை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். 

அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைவரும் கால்பந்தாட்டத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் விரிவடையும். மேலும் நாடு முழுவதும் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் கால்பந்து சமூகத்தினருக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகும். 

இலங்கை கால்பந்தாட்டத்தின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட இப் பயனுள்ள சந்திப்பின் நிறைவில், ஃபீஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் பரஸ்பர கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 

தொலைநோக்கு தெளிவாக உள்ளது. வலுவான ஒரு கால்பந்து தேசத்தை உருவாக்குதல், நாட்டின் அனைத்து சமூகங்களுக்கும் கால்பந்தாட்டத்தைக் கொண்டு சேர்ப்பது மற்றும் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையின் மிகவும் பிரபல விளையாட்டாகக் கால்பந்தாட்டத்தை மாற்றுவதாகும். 

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<