ஆசிய இளையோர் றக்பியில் இலங்கைக்கு இரண்டாமிடம்  

276
Asia Rugby Emirates U20 Sevens Tournament 2025

இந்தியாவின் பீஹாரில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட அணிக்கு எழுவர் ஆசிய கிண்ண றக்பி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஷாஹித் சும்ரி தலைமையிலான இலங்கை அணி 2ஆவது இடத்தைப் பிடித்தது.

இம்முறை போட்டித் தொடரில் தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி, துரதிஷ்டவசமாக கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஹொங் கொங் அணிக்கு எதிராக 33-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தியாவின் பீகாரில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் நாளான 9ஆம் திகதி இலங்கை வீரர்கள் தங்கள் ஆரம்ப சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு ‘A’ பிரிவில் முன்னிலை வகித்தனர். முதல் போட்டியில் ஹொங் கொங்கை 24-19 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை வீரர்கள், இரண்டாவது போட்டியில் இந்தியாவை 24-05 என்ற புள்ளிகள் கணக்கில் எளிதாக வென்றனர். ஆரம்ப சுற்றின் இறுதிப்போட்டியில், இலங்கை அணி ஒரு இறுக்கமான போட்டிக்குப் பிறகு ஐக்கிய அரபு இராச்சியத்தை 26-24 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது.

அதன்படி, கோப்பைக்கான அரையிறுதிக்குள் நுழைந்த இலங்கை, சீனாவை 26-17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இறுதிப் போட்டியில், இலங்கை அணியின் பின்னடைவு காரணமாக முதல் பாதியில் 19-0 என முன்னிலை பெற்ற ஹொங் கொங் அணி, இரண்டாவது பாதியில் மேலும் 14 புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்கிடையில், பெண்கள் பிரிவில் இலங்கை அணிக்கு 7ஆவது இடத்தைப் பிடிக்க முடிந்தது. முதல் நாளில் நடைபெற்ற ஆரம்ப சுற்றில், குழு ‘C’ இன் கீழ் போட்டியிட்ட இலங்கை வீராங்கனைகள், முதல் போட்டியில் சீனாவிடம் 55-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நேபாளத்தை 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினர். ஆரம்ப சுற்றின் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானிடம் 28-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த இலங்கை, குழுவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து கேடயத்ததுக்கான சம்பியன்ஷிப் சுற்றுக்குள் நுழைந்தது.

பின்னர், 10ஆம் திகதி நடைபெற்ற கேடயத்ததுக்கான சம்பியன்ஷிப் சுற்றின் அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திடம் 31-12 என தோல்வியடைந்த இலங்கை அணி, அடுத்த போட்டியில் நேபாளத்தை 24-12 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<