மட்டக்களப்பு பிரிவு A கழக கிரிக்கெட் தொடரின் சம்பியனாக சிவானந்தா

100

மட்டக்களப்பு கிரிக்கெட் சங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரிவு A கிரிக்கெட் கழகங்கள் இடையில் இம்முறை ஏற்பாடு செய்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சம்பியன்களாக மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரிவு A அணிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்தே, மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகம் சம்பியன்களாக மாறியிருக்கின்றது.

சகீப் அல் ஹசனின் சிறப்பாட்டத்தோடு பங்களாதேஷ் அணி வெற்றி

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முக்கோண………….

பிரிவு A அணிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (22) மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சிவானந்தா அணி, ஏறாவூர் வீரர்களை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது. 

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழக அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

யங் ஸ்டார் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அன்சார் அரைச்சதம் ஒன்றினை பூர்த்தி செய்து 3 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதேநேரம், ஆசிக் 31 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Photos Album : Sivananda SC vs Young star SC – Batticaloa District Cricket Association Tournament Final 

மறுமுனையில் சிவானந்தா அணியின் பந்துவீச்சு சார்பில் புருஷோத், நிர்தீஷ், சுஹீர் மற்றும் லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 174 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய சிவானந்தா அணி தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது. 

சிவானந்தா அணி போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்காக எதிர்பார்த்த ஆரம்பத்தை பெறாவிட்டாலும், 46 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்து கொண்டது. 

சிவானந்தா அணியின் வெற்றிக்காக அனுரன் 32 ஓட்டங்களை பெற்று உதவியிருக்க, சாத்வீகன் 29 ஓட்டங்களுடனும் நிவாஸன் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தனர். 

யங் ஸ்டார் அணியின் பந்துவீச்சு சார்பில் றிப்னாஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதிலும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

யங் ஸ்டார் வி.க – 173 (46.1) அன்சார் 51, ஆசிக் 31, லக்ஷன் 20/2, நிர்தீஷ் 24/2, புருஷோத் 26/2, சுஹீர் 37/2

சிவானந்தா வி.க – 175/5 (46) அனுரன் 32, சாத்வீகன் 29*, நிவாஸன் 23*, றிப்னாஸ் 30/2

முடிவு – சிவானந்தா விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<