3ஆவது டெஸ்ட்டிலிருந்து பெட் கம்மின்ஸ் திடீர் விலகல்

126

இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா அணித் தலைவர் பெட் கம்மின்ஸ் விலகியதால், 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான தலைவராக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி, போர்டர் கவாஸ்கர் கிண்ணத்துக்காக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் தற்போது 2 போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளதுடன், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் 2ஆவது இடத்துக்கு முன்னேறி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

இதனிடையே, கடைசி இரண்டு போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுகிறது. இந்தூர் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுற்றவுடன் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக அவுஸ்திரேலியா திரும்பினார். ஓரிரு தினங்களில் அணிக்கு திரும்பி வந்துவிடுவார் என்று அந்த அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கம்மின்ஸ், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பெட் கம்மின்ஸின் தாய் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பெட் கம்மின்ஸ் தனது தாயுடன் நேரத்தை செலவிட விரும்புவதால் அவர் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பெட் கம்மின்ஸ் கூறியுள்ளதாவது, எனது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதால் இந்த நேரத்தில் இந்தியாவுக்குத் திரும்புவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலியா அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் பெட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து வெளியேறியதால் ஸ்டீவ் ஸ்மித் அப்போது தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, பெட் கம்மின்ஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு ஸ்மித் அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியின் தவைராக 2 தடவைகள் செயல்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, கெமரூன் க்ரீன், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வோர்னர், ஜோஷ் ஹசில்வுட், என அவுஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது பெட் கம்மின்ஸும் அணியில் இருந்து விலகியுள்ளது அவுஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், முதலிரெண்டு டெஸ்ட் போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் கெமரூன் கிரீன் ஆகிய இருவரும் எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<