உலகக் கிண்ணம் வெல்வதே திட்டம் – ஹார்திக் பாண்டியா

227

இலங்கை தொடரில் இந்திய T20I அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் ஹார்த்திக் பாண்டியா புத்தாண்டில் தனது திட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

புத்தாண்டின் புதிய சவாலை சமாளிக்குமா இலங்கை கிரிக்கெட் அணி?

ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இலங்கையுடன் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவுள்ள நிலையில் இந்த தொடருக்கு முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே ஹார்திக் பாண்டியா தனது திட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

”(எனது) பெரிய இலக்காக உலகக் கிண்ணம் வெல்வது காணப்படுகின்றது. அதனை விட பெரிய புத்தாண்டு தீர்மானம் (New Year Resolution) எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை. (இதற்காக) எங்களது ஆற்றல் மூலம் முடிந்த அனைத்தினையும் முயற்சிப்போம்.” எனக் குறிப்பிட்ட ஹார்திக் பாண்டியா இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரினை கைப்பற்றுவதே தனது எதிர்பார்ப்பாக இருப்பதாக கூறியிருந்தார்.

”ஒரு வருடத்திற்கு முன்னர் விடயங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்தன. நான் (இந்திய) குழாத்தில் இருந்து வெளியேறிய பின்னர், மிகவும் கடினமாக இருந்தது. அது எனக்கு மாயஜால வருடமாக அமைந்திருந்தது. வெளிப்படையாக நான் உலகக் கிண்ணத்தை (T20 உலகக் கிண்ணத்தை) வெல்வதனை விரும்பியிருந்தேன், ஆனால் இது விளையாட்டின் ஒரு அங்கம். முன்னோக்கிச் செல்லும் போது, பல விடயங்கள் சாதிப்பதற்கு இருக்கின்றன. நான் அவற்றில் எதனையும் சாதிக்கவில்லை என்பதோடு எதிர்காலத்தில் சாதிக்க எதிர்பார்த்திருக்கின்றேன் – அதாவது பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு உலகக் கிண்ணங்கள்” என்றார்.

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் ஹார்திக் பாண்டியா இந்திய ஒருநாள் அணியின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஹார்த்திக் பாண்டியா இந்திய ஒருநாள் அணியின் நிரந்தர தலைவராக மாறுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. இந்த விடயங்களை கருத்திற் கொண்டே எதிர்வரும் ஆண்டுகளில் தாய்நாட்டிற்காக உலகக் கிண்ணம் ஒன்றை வெற்றி கொள்வது தனது கனவு என ஹார்த்திக் பாண்டியா குறிப்பிட்டிருக்கின்றார். ஏற்கனவே ஹார்த்திக் பாண்டியா தலைமையிலான குஜாராத் டைடன்ஸ் அணி தாம் விளையாடிய முதல் பருவத்திலேயே இந்திய பிரீமியர் லீக் (IPL) சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் எப்படி இருந்தது?

இதேவேளை இலங்கை அணியுடனான T20 தொடரில் தனது திட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்ட ஹார்த்திக் பாண்டியா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

”திட்டங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. நாங்கள் ஒரு வகையில் விளையாடுவதற்கு எதிர்பார்க்கின்றோம். நாங்கள் புதிய திட்டங்களை தொடர்ந்தும் உருவாக்குவதோடு, எந்த திட்டங்கள் எங்களுக்கு கைகொடுக்கும் என்பதனையும், எந்த திட்டங்களை எதிர்காலத்திற்கு கொண்டு செல்வதற்கு  முடியும் என்பதனையும் பார்க்கவிருக்கின்றோம். அத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது சரியான நேரத்தில் அனைவரது திறமைகளையும் வெளிப்படுத்துவதை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதனையும் நாங்கள் பார்க்கவிருக்கின்றோம்.”

அத்துடன் விபத்துக்குள்ளான இந்திய துடுப்பாட்டவீரர் ரிசாப் பாண்ட் குறித்தும் கருத்து வெளியிட்ட ஹார்த்திக் பாண்டியா அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் முன்னேற்ற பாதையை ஆரம்பித்த 2022ம் ஆண்டு!

”அவருக்கு (ரிசாப் பாண்டிற்கு) நடந்தது உண்மையில் துரதிஷ்டவசமானது, இதனை எவரும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. ஒரு அணியாக நாம் அவரது நலனுக்காக பிரார்த்திப்பதோடு, எங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் அவருக்கு இருக்கும். அத்துடன் அவர் விரைவில் குணமடைவதற்கும் பிரார்த்திக்கின்றோம்.”

இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டி இன்று (03) மாலை 7 மணிக்கு மும்பை வங்கடே சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<