ரூட்டின் அரைச்சதத்துடன் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

291

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்கும் இலங்கை

அதேநேரம், இப்போட்டியின் வெற்றியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

இன்று (29) செஸ்டர்-லே-ஸ்ரிட் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை கிரிக்கெட் அணிக்கு வழங்கியிருந்தார்.

துடுப்பாட பணிக்கப்பட்ட இலங்கை அணி இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, சகலதுறைவீரர்களான சரித் அசலன்க, தனன்ஞய லக்ஷான் மற்றும் சுழல்பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியினை முதல் தடவையாக ஒருநாள் அரங்கில் பிரதிநிதித்துவம் செய்யும் சந்தர்ப்பத்தினை இந்த ஒருநாள் போட்டி மூலம் பெற்றிருந்தனர்.

இலங்கை XI – சரித் அசலன்க, குசல் பெரேரா (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, பிரவீன் ஜயவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ் தனன்ஞய லக்ஷான், துஷ்மன்த சமீர, பினுர பெர்னாந்து, சாமிக்க கருணாரட்ன

இங்கிலாந்து XI – ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, ஜொன்னி பெயர்ஸ்டோவ், இயன் மோர்கன் (தலைவர்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், டேவிட் வில்லி, ஆதீல் ரஷீட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த ஆரம்பம் ஒன்று அமையவில்லை. இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த பெதும் நிஸ்ஸங்க வெறும் 5 ஓட்டங்களுடன் வெளியேற, அறிமுகவீரரான சரித் அசலன்கவும் ஓட்டங்கள் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக வந்த தசுன் ஷானக்கவும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை கிரிக்கெட் அணி ஒரு கட்டத்தில் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட்

பின்னர் நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த இலங்கை அணித்தலைவர் குசல் பெரேரா மற்றும் வனிந்து ஹஸரங்க பொறுமையான முறையில் துடுப்பாடி 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

எனினும், இந்த இரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்களை அடுத்து தடுமாறத் தொடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 185 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 15ஆவது ஒருநாள் அரைச்சதத்தினைப் பதிவு செய்த குசல் பெரேரா 81 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை எடுக்க, வனிந்து ஹஸரங்க தன்னுடைய 3ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 65 பந்துகளில் 54 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் வெறும் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, டேவிட் வில்லி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 186 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களினால் வெற்றி இலக்கிற்கான பயணத்தில் சிறிது தடுமாற்றம் காட்டியது. எனினும், ஜோ ரூட்டின் பொறுமையான முறையில் துடுப்பாடி பெற்ற அரைச்சதத்தின் காரணமாக போட்டியின் வெற்றி இலக்கினை இங்கிலாந்து கிரிக்கெட் அணி 34.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களுடன் அடைந்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த ஜோ ரூட், தன்னுடைய 34ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 87 பந்துகளில் 4 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்களை பெற்று தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மன்த சமீர 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் தனது சிறந்த பந்துவீச்சுக்காக பெற்றுக்கொண்டார்.

இனி இரண்டு அணிகளும் பங்கேற்கும் இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (01) லண்டன் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<