நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையில் கிரிஸ்ட்ச்சேச்சில் நடைபெற்ற இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியினை பதிவுசெய்து, தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து
நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு…
நேற்றைய ஆட்டநேர முடிவில் 231 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி, இன்றைய தினம் தங்களுடைய மேலதிக 3 விக்கெட்டுகளையும், 5 ஓட்டங்களுக்கு இழந்ததுடன், நேற்றைய தினம் உபாதைக்குள்ளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ், துடுப்பெடுத்தாடவில்லை. சுரங்க லக்மால் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டில்ருவான் பெரேரா 22 ஓட்டங்களுடனும், துஷ்மந்த சமீர 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட், டீம் சௌதி மற்றும் நெயில் வெங்கர் ஆகியோர் இன்றைய தினம் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தி, நியூசிலாந்து அணியை சாதனை வெற்றிபெறச் செய்தனர்.
நியூசிலாந்து அணியின் இந்த வெற்றியானது, ஓட்டங்களின் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியை 254 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. தற்போது இலங்கை அணியை 423 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. அத்துடன், இங்கிலாந்து, மே.தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்திய நியூசிலாந்து அணி, தொடர்ச்சியாக 4வது டெஸ்ட் தொடரினை வென்று சாதனைப் படைத்துள்ளது.
இதேவேளை, இந்த தோல்வியானது இலங்கை அணிக்கு, இன்னிங்ஸ் தோல்வி அல்லாமல், ஓட்டங்கள் அடிப்படையில் கிடைத்த மிகப்பெரிய தோல்வியாக அமைந்துள்ளது. கடந்த வருடம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்த இலங்கை அணி, இந்த போட்டியில் 423 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது.
போட்டியை பொருத்தவரையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியை வேகத்தால் 178 ஓட்டங்களுக்கு இலங்கை அணி சுருட்டியது. டீம் சௌதி 66 ஓட்டங்களை பெற, பந்து வீச்சில் லக்மால் 5 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மறுமுனையில் நியூசிலாந்தின் வேகத்துக்கு தடுமாறிய இலங்கை அணி வெறும் 104 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில், மெதிவ்ஸ் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற, ட்ரென்ட் போல்ட் 6 விக்கெட்டுகளையும், டீம் சௌதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ்
நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில்…
இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஹென்ரி நிக்கோலஸ் மற்றும் டொம் லேத்தம் ஆகியோரின் அபார சதங்களின் ஊடாக 578/4 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியதுடன், இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 660 ஓட்டங்களை நிர்ணயித்தது. டொம் லேத்தம் 176 ஓட்டங்களையும், ஹென்ரி நிக்கோலஸ் 162 ஓட்டங்களையும் குவிக்க, லஹிரு குமார 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர், தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 236 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, தொடர் தோல்வியினை சந்தித்துள்ளது. இந்த தொடரில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி 6வது இடத்தை தக்கவைத்துள்ளது.
போட்டி சுருக்கம்