பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு ஆர்வளர்கள் இன்று இருக்கின்றனர் என்றார் அது வியப்படைய வேண்டிய ஒரு விடயமாக இருக்கும். காரணம், உலக சனத்தொகையில் மிகப் பெரிய ஒரு பங்கு மக்கள் விரும்பும், மதிப்பளிக்கும் ஒரு விடயமாக பிஃபா (கால்பந்து) உலகக் கிண்ணம் இருக்கின்றது.
ஆனால் இது இன்று. இதன் ஆரம்பம் வித்தியாசமானது. அவ்வாறான ஒரு ஆரம்பத்துடன் இன்று இந்த விளையாட்டும், இதன் மீதான ஆர்வமும் இவ்வளவு விரிவடைந்துள்ளது என்பது வியப்பான ஒரு விடயமே.
உலகக் கிண்ணத்தை கண்ணீரோடு மெருகேற்றும் இத்தாலி
ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் உலகக்….
முதலாவது பிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்க வரும்படி பல நாடுகளிடமும் கெஞ்சிக் கூத்தாட வேண்டி இருந்தது. ஆனால் இன்று கிட்டத்தட்ட 200 நாடுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகக் கிண்ணப் போட்டிகளின் 21ஆவது அத்தியாயம் அடுத்த மாதம் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், 1930ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிஃபா உலகக் கிண்ணத்தின் வரலாற்றை ஒரு முறை நாம் இங்கு பார்ப்போம்.
1930 – உருகுவே

அந்த காலத்தில் தென் அமெரிக்காவுக்கு பிரயாணம் செய்வது என்பது கடினமாக இருந்தது என்பதால் நான்கு ஐரோப்பிய நாடுகள் மாத்திரமே போட்டியில் பங்கேற்றன. பிரான்ஸின் லூசயென் லோரண்ட் உலகக் கிண்ணத்தில் முதல் கோலை போட்டவராக பதிவானார். மெக்சிகோவுடனான அந்தப் போட்டியில் பிரான்ஸ் 4-1 என வென்றது.
நெய்மார் ரியல் மெட்ரிட் வருவது ‘பயங்கரமானது’ என்கிறார் மெஸ்ஸி
பார்சிலோனா அணியில் விளையாடிய தனது……..
1928 ஒலிம்பிக் கால்பந்து சம்பியனான உருகுவே இறுதிப் போட்டியில் தனது அண்டை நாடான ஆர்ஜன்டீனாவை 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று முதலாவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. இந்த போட்டியை 93,000 பேர் பார்வையிட்டார்கள் என்பது கன்னி உலகக் கிண்ணத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
1934 – இத்தாலி

32 அணிகள் தகுதிகாண் போட்டியில் ஆடியதோடு 16 அணிகள் தேர்வு பெற்றன. எதிர் காலத்தில் கிண்ணத்தை கைப்பற்றப்போகும் போட்டியை நடத்தும் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் முதல் முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்றன.
இத்தாலி மற்றும் செக்கொஸ்லோவாக்கியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி 1-1 என சமநிலையானது. எனவே, முதல் முறை வெற்றி அணியை தேர்வு செய்ய மேலதிக நேரம் வழங்கப்பட்டது. ஐந்து நிமிடங்களின் பின் இத்தாலி கோல் புகுத்தி கிண்ணத்தை வென்றது. எனினும், இந்த தொடரில் நடுவர்களை பணத்துக்கு வாங்கியதான சர்ச்சை ஒன்று இருந்ததை குறிப்பிட வேண்டும்.
1938 – பிரான்ஸ்

போட்டியை நடத்துவது பற்றிய சர்ச்சையால் உருகுவே மற்றும் ஆர்ஜன்டீனா உலகக் கிண்ணத்தை புறக்கணித்தன. அப்போது டச்சு கிழக்கு இந்தியா என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியா ஆசியாவின் முதல் நாடாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்றது.
ஹங்கேரிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்ற இத்தாலி அடுத்தடுத்து இரண்டாவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. அடுத்ததாக இரண்டாவது உலகப் போர் மூண்டதால் இத்தாலியின் பிஃபா அதிகாரி ஒட்டோரினோ பராசி உலகக் கிண்ணத்தை தனது கட்டிலுக்கு கீழ் மறைத்து பாதுகாத்தார்.
இந்த உலகப் போரால் அடுத்த 12 ஆண்டுகளில் எந்த ஒரு உலகக் கிண்ணமும் நடைபெறவில்லை.
1950 – பிரேசில்

இரண்டு கட்ட குழுநிலை போட்டிகளாக நடந்த இந்த உலகக் கிண்ணத்தில் தனியே இறுதிப் போட்டி ஒன்று இருக்கவில்லை. என்றாலும் தீர்மானம் மிக்க கடைசி குழுநிலை போட்டியில் உருகுவே அணி போட்டியை நடத்தும் பிரேசிலை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் ஒருமுறை சம்பியனானது. ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் மரகானா அரங்கில் நடந்த இந்த போட்டியை பார்வையிட 200,000 ரசிகர்கள் கூடினார்கள்.
1954 – சுவிட்சர்லாந்து

ஒரு கத்துக்குட்டி அணியாக கலந்து கொண்ட மேற்கு ஜெர்மனி இறுதிப் போட்டியில் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஹங்கேரியை சந்தித்தது. பேர்ன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனி 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றபோதும் அதனை ‘பெர்னின் அதிசயம்’ என்றே இன்றுவரை அழைக்கின்றனர். இந்த போட்டியில் ஹங்கேரி வீரர் புஸ்காஸ் 88ஆவது நிமிடத்தில் சமநிலையாக்கும் கோல் ஒன்றை புகுத்தியபோது சர்ச்சைக்குரிய முறையில் அது ஓப்சைட் என அறிவிக்கப்பட்டதே ஜெர்மனிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.
1958 – சுவீடன்

இரண்டு முறை சம்பியனான இத்தாலி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை. 17 வயதான பீலே தனது முதல் உலகக் கிண்ணத்தில் பங்கேற்றார். அப்போது அவர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இளம் வீரராக சாதனை படைத்தார். போட்டியை நடத்திய சுவீடனுடனேயே பிரேசில் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது. அதில் பீலே இரண்டு கோல்களை புகுத்த பிரேசில் 5-2 என வெற்றி பெற்று முதல் முறை உலகக் கிண்ணத்தை வென்றது.
1962 – சிலி

எனினும் வரலாற்றில் இதுவரை பதிவான மிகப்பெரிய பூகம்பத்திற்கு 1960 ஆம் ஆண்டு முகம்கொடுத்த சிலி போட்டியை நடத்துவதில் சிரமப்பட்டது. அதன் பல மைதானங்களும் சேதமடைந்தன.
நடப்பு சம்பியன் ஜெர்மனியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு
இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை வெல்லும்…..
ஆரம்ப இரு போட்டிகளைத் தவிர பீலே காயத்தால் போட்டிகளில் பங்கேற்காத நிலையிலும் பிரேசில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கரின்சா மற்றும் அமரில்டோவின் திறமையான ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் செக்கொஸ்லோவாக்கியாவுடனான இறுதிக் போட்டியில் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்தடுத்து இரண்டாவது உலகக் கிண்ணத்தை வென்றது.
1966 – இங்கிலாந்து

போர்த்துக்கல் மற்றும் வட கொரியா தனது முதல் உலகக் கிண்ணத்தில் பங்கேற்றன. வெம்ப்லின் அரங்கில் 98,000 பார்வையாளர்கள் முன் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டது. மேலதிக நேரத்திற்கு போன போட்டியில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
1970 – மெக்சிகோ

முந்தைய உலகக் கிண்ண போட்டியில் தாம் இலக்கு வைத்து எதிரணிகளால் தடுக்கப்பட்டதால் 1970 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை ஆரம்பத்தில் மறுத்த பீலே, தகுதிகாண் போட்டிகளில் அணிக்கு திரும்பி பின்னர் திறமையை வெளிப்படுத்தினார். இத்தாலியுடனான இறுதிப் போட்டியில் 4-1 என பிரேசில் வென்று உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறை தன்வசமாக்கியது.
இந்த இலக்கை எட்டியதால் பிரேசில் அணிக்கு ஜுல்ஸ் ரிமெட் கிண்ணம் நிரந்தரமாக சொந்தமானது. ரியோ டி ஜெனிரோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கிண்ணம் 1983ஆம் ஆண்டு களவாடப்பட்டு கடைசி வரை கிடைக்கவே இல்லை.
1974 – மேற்கு ஜெர்மனி

புதிய உலகக் கிண்ணம் உருவக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் நெதர்லாந்துடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த போட்டியை நடத்தும் மேற்கு ஜெர்மனி தகுதி பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் உதவியோடு ப்ரன்ஸ் பெகன்பேர்க் தலைமையிலான மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
1978 – ஆர்ஜன்டீனா

உலகக் கிண்ணத்திற்கான ரொனால்டோவின் போர்த்துக்கல் குழாம் அறிவிப்பு
உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு…….
நெதர்லாந்துடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்ஜன்டீனா 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று முதல் முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. நெதர்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் இறுதிப் போட்டியில் தோற்றது.
1982 – ஸ்பெயின்

குழுநிலை போட்டியில் எல்சல்வடோரை 10-1 என ஹங்கேரி வீழ்த்தியது அதிக கோல் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது. இதில், மெட்ரிட்டின் பெர்னபு அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் இத்தாலி அணி மேற்கு ஜெர்மனியை 3-1 என வீழ்த்தி மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை வென்றது.
1986 – மெக்சிக்கோ

அரங்கில் உள்ள ரசிகர்கள் அலை அலையாக காட்டும் ‘மெக்சிகோ வெள்’ கொண்டாட்டம் இந்த உலகக் கிண்ணத்தில் அறிமுகமாகி இன்றுவரை தொடரும் ஒன்றாக உள்ளது.
இறுதிப் போட்டியில் டியாகோ மரடோனாவின் ஆர்ஜன்டீனா 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துடனான காலிறுதியில் மரடோனா தனது கையால் போட்ட கோல் இன்று வரை அவருக்கு கறையை ஏற்படுத்தி இருப்பதோடு அதே போட்டியில் அவர் போட்ட மற்ற கோல் நூற்றாண்டின் சிறந்த கோலாக பதிவானது.
1990 – இத்தாலி

முந்தைய இரண்டு உலகக் கிண்ணங்களிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்ற மேற்கு ஜெர்மனி, மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆர்ஜன்டீனாவை எதிர்கொண்டது. இம்முறை சந்தர்ப்பத்தை கைவிடாத மேற்க ஜெர்மணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
1994 – அமெரிக்கா

ஆர்ஜன்டீனாவின் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி வெளியேற்றப்பட்டார். அன்ட்ரஸ் எஸ்கோபர் போட்ட ஓன் கோல் கொலம்பிய அணியின் தோல்விக்கு காரணமாக, பத்து நாட்கள் கழித்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காயத்திலிருந்து மீண்டு வரும் நெய்மார் பிரேசில் உலகக் கிண்ண குழாமில்
காயத்தில் இருந்து மீண்டு வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்…..
ரோஸ்போலில் பிரேசில் மற்றும் இத்தாலி அணிகள் மோதிய இறுதிப் போட்டி மேலதிக நேரத்திலும் கோலின்றி முடிந்ததால் முதல் முறை பெனால்டி உதைகள் மூலம் வெற்றி அணி தீர்மானிக்கப்பட்டது. இத்தாலியின் ரொபர்டோ பக்கியோ உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே பறந்து செல்ல, பிரேசில் கிண்ணத்தை வென்றது.
1998 – பிரான்ஸ்

பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகள் மோதிய இறுதிப் போட்டிக்கான பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. அவருக்கு சிறிதாக வலிப்பு வந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டபோதும் கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.
எனினும் சினேடின் சிடேனின் இரண்டு கோல்கள் மற்றும் எம்மானுவேல் பெடிடின் கோல் என்பவற்றால் 3-0 என வெற்றி பெற்ற பிரான்ஸ் முதல் முறை உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.
2002 – ஜப்பான் மற்றும் தென் கொரியா

முந்தைய உலகக் கிண்ணங்களை வென்ற ஏழு அணிகளும் இந்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றபோதும் முதல் போட்டியில் கத்துக்குட்டி செனகலிடம் பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பின்னர் உருகுவே மற்றும் டென்மார்க்கிடம் தோற்ற நடப்புச் சம்பியன் கோலின்றி வெளியேறியது.
பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் திறமையின் உச்சத்தில் இருந்த ரொனால்டோ இரண்டு கோல்களை புகுத்த பிரேசில் அதிகபட்சமாக ஐந்தாவது முறை உலகக் கிண்ணத்தை வென்றது.
2006 – ஜெர்மனி

இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி 1-1 என சமநிலையாக, பெனால்டி முறையில் இத்தாலி கிண்ணத்தை வென்றது. இதில் தனது கடைசி போட்டியில் ஆடிய பிரான்சின் சினேடின் சிடேன் இத்தாலி வீரர் மார்கோ மடரெசியின் நெஞ்சில் தலையால் முட்டி சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது.
2010 – தென்னாபிரிக்கா

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க
ஸ்பெயின் – நெதர்லாந்துக்கு இடையிலான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்பெயின் 1974 மேற்கு ஜெர்மனிக்கு பின் உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற முதல் நாடாக இடம்பெற்றது.
2014 – பிரேசில்

நடப்பு சம்பியன் ஸ்பெயின் முதல் சுற்றிலேயே எதிர்பாராமல் வெளியேறியது. மேலும் அதிர்ச்சி தரும் வகையில் பலம்மிக்க பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனியின் மிரொஸ்லோ க்ளோஸ் போட்ட கோல் மூலம் உலகக் கிண்ணத்தில் அதிகபட்சம் 16 கோல்களை பெற்றவராக ரொனால்டோ சாதனையை முறியடித்தார்.
ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்ற ஜெர்மனி நான்காவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது.
இவ்வாறான சாதனைகள் மற்றும் சோதனைகளுடன் இடம்பெற்ற பிஃபா உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த கட்டமாக இம்முறை இடம்பெறும் தொடரில் கிண்ணத்தை வெல்லும் அணி எது?
உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க




















