தோமஸ் – திரித்துவக் கல்லூரி இடையிலான சமர் சமநிலையில் முடிவு

214
Lions huff and puff but couldn’t blow the Thomians down

கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி கால்பந்து அணிகளுக்கு இடையில் வருடாந்தம் இடம்பெறும் போட்டியில் இன்று இடம்பெற்ற இவ்வருடத்திற்கான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இரு கல்லூரி அணிகளுக்கு இடையிலும் வருடாந்தம் இடம்பெறும் கால்பந்து சமரின் ஏழாவது முறையாக இடம்பெறும் போட்டி இன்று மாலை கொழும்பு CR & FC மைதானத்தில் நடைபெற்றது. இதில் மிக முக்கிய போட்டியாகக் கருதப்படும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இரு கல்லூரி அணிகளுக்கும் இடையிலான போட்டியைக் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது போன்று போட்டி ஆரம்பமாகியது முதலே, இரு அணியினரும் மிகவும் அபாரமாக தமது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து இரு திசைக்கும் சம அளவில் சென்றுகொண்டே இருந்தது.

போட்டியின் 20 நிமிடங்கள் கடந்திருந்த நிலையில் திரித்துவக் கல்லூரி அணியின் முக்கிய வீரரான அனுக பொயாகொட எதிரணியின் பெனால்டி பெட்டிக்கும் வெளியில் இருந்து மிகவும் வேகமாக கோல் கம்பங்களை நோக்கி பந்தை உதைந்தார். எனினும் அந்தப் பந்து வலது பக்க கம்பத்திற்கு மிக அண்மித்ததாக வெளியே சென்றது.

பின்னர் போட்டியின் 30ஆவது நிமிடத்தில், தோமஸ் கல்லூரி அணியின் பின்கள வீரர்கள் முன்னே உதைந்த பந்தை, அவ்வணியின் நடுக்கள மற்றும் முன்கள வீரர்கள் பலர் தமக்கிடையே பரிமாற்றிக்கொண்டு எதிரணியின் கோல் திசைக்கு மிகவும் சிறப்பான முறையில் பந்தைக் கொண்டு வந்தனர். எனினும் இறுதிக் கட்டத்தில் திரித்துவக் கல்லுரியின் பின்கள வீரர்கள் அதை ஒரே உதையாக எதிர் திசைக்கு உதைந்து எதிரணிக்கான வாய்ப்பை தடுத்தனர்.

இவ்வாறு பல வாய்ப்புகள் இரு அணிகளுக்கும் கிடைத்த நிலையிலும் அவர்கள் அவற்றை சிறந்த முறையில் நிறைவு செய்யவில்லை.

முதல் பாதி: திரித்துவக் கல்லூரி (0) – (0) புனித தோமஸ் கல்லூரி

பின்னர் ஆரம்பமாகிய மிகவும் தீர்க்கமான இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் முதல் பாதியைப் போன்றே சம அளவில் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அவை சிறந்த முறையில் நிறைவு செய்யப்படவில்லை.

குறிப்பாக இன்றைய போட்டியில் புனித தோமஸ் கல்லூரி அணிக்காக 17 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட பல வீரர்களும் விளையாடினர். எனினும் அவர்கள் தமது முழு திறமையையும் காண்பித்து தமது அணிக்கு மிகப் பெரிய ஒரு பங்களிப்பை வழங்கினர்.

இரண்டாவது பாதியின் இறுதிக் கட்டத்தில் திரித்துவக் கல்லூரி வீரர்கள் மிகவும் வெகமான ஒரு ஆட்டத்தைக் காண்பித்தனர். எனினும் தோமஸ் அணி வீரர்கள் மெதுவான மற்றும் நிதானமான ஒரு ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

மிகவும் போராட்டம் மிக்க போட்டியாக அமைந்த இந்தப் பொட்டியில் இறுதி வரை எந்த அணியினரும் கோல்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

முழு நேரம்: திரித்துவக் கல்லூரி (0) – (0) புனித தோமஸ் கல்லூரி

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – தரிக லியனகே (திரித்துவக் கல்லூரி)

போட்டியின் பின்னர் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த புனித தோமஸ் கல்லூரியின் பயிற்சியாளர் மஹிந்தபால, ”நாம் இந்தப் போட்டியை சமநிலையில் முடித்தமை உண்மையிலேயே அதிஷ்டம் எனறு தான் கூற வேண்டும். திரித்துவக் கல்லூரியின் பலமான ஆட்டத்திற்கு மத்தியில் நாம் விளையாடினோம். சிறந்த போட்டியாக இது இருந்தது” என்றார்.

திரித்துவக் கல்லூரி அணியின் பயிற்சியாளர் கருத்து தெரிவிக்கையில் ”சிறந்த முறையில் விளையாடிய எமது அணிக்கு துரதிஷ்டவசமாக வெற்றி கொள்ள முடியாமல் போனது. வீரர்களின் சிறந்த ஆட்டம் இருந்தது. எனினும் எமக்கு எதிரான சில தீர்ப்புகளும் போட்டியில் வழங்கப்பட்டமை எமக்கு பாதிப்பாக அமைந்தது” என்று தெரிவித்தார்.

இரு கல்லூரி அணிகளுக்கும் இடையிலான ஏனைய போட்டிகள்

11 வயதின் கீழ் – திரித்துவக் கல்லூரி (0) – (1) புனித தோமஸ் கல்லூரி
13 வயதின் கீழ் B – திரித்துவக் கல்லூரி (3) – (0) புனித தோமஸ் கல்லூரி
13 வயதின் கீழ் A – திரித்துவக் கல்லூரி (2) – (1) புனித தோமஸ் கல்லூரி
15 வயதின் கீழ் B – திரித்துவக் கல்லூரி (0) – (0) புனித தோமஸ் கல்லூரி
15 வயதின் கீழ் A – திரித்துவக் கல்லூரி (1) – (1) புனித தோமஸ் கல்லூரி
17 வயதின் கீழ் – திரித்துவக் கல்லூரி (0) – (1) புனித தோமஸ் கல்லூரி