ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் தனஞ்சனாவிற்கு வெள்ளி, லஹிருவிற்கு வெண்கலம்

6th Asian youth Athletic Championship 2025

62
Athletic Championship 2025 D

சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 6ஆவது 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 2ஆவது நாளான நேற்று (16) இலங்கை ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது.

ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற இரத்தினபுரி புனித அலோசியஸ் கல்லூரி வீரர் லஹிரு அச்சின்த 3 நிமிடங்கள், 59.47 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ 11.92 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதற்கிடையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றிருந்த போதிலும், அவர்களின் பதக்க நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன. இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இரேஷ் போகோட ஏழாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் சத்துஷ்க இமேஷ் சில்வா (10.84 செக்.) கடைசி இடத்தைப் பெற்றார்.

மேலும், பெண்களுக்கான 2000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற சச்சினி மதுஹன்சிகா, போட்டித் தூரத்தை 7 நிமிடங்கள் 23.46 செக்கன்களில் ஓடி முடித்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

இது தவிர, நேற்று நடைபெற்ற ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டிக்கு அம்பலாங்கொட தேவாநன்த வித்தியாலயத்தைச் சேர்ந்த சவிந்து நிமே{ம், பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டிக்கு அம்பகமுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த சன்சலா ஹிமாஷினியும் தகுதிபெற்றுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியின் ஆரம்ப சுற்று நேற்று நடைபெற்றது, இதன் முதலாவது ஆரம்ப சுற்றில் பங்கேற்ற முலந்தியாவல மகா வித்தியாலத்தைச் சேர்ந்த தினுக டில்ஷான் ஆறாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார், அதே நேரத்தில், இரண்டாவது ஆரம்ப சுற்றில் பங்கேற்ற திம்பிரிகஸ்கட்டுவ மாரிஸ்டெல்லா கல்லூரியைச் சேர்ந்த நெத்ய சம்பத் முதலிடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

6ஆவது 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இதுவரை இலங்கைக்கு 2 வெள்ளிப் பதக்கங்களும், ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது.

இன்று (17) போட்டியின் கடைசி நாளாகும்.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<