இங்கிலாந்தில், இங்கிலாந்து இளைஞர் அணியை வீழ்த்தியது இலங்கை இளைஞர் அணி

182
sl-youth-cricket

இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இடையிலான 2ஆவது நான்கு நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 3ஆம் திகதி நோர்த்ஹாம்டனில் ஆரம்பமாகியது. இங்கிலாந்து இளைஞர் அணி முதல் இனிங்ஸில் 208 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இலங்கை இளைஞர் அணி 307 ஓட்டங்களை முதல் இனிங்ஸிற்காகப் பெற்று 99 ஓட்டங்கள் முன்னிலைபெற்றது. இங்கிலாந்து இளைஞர் அணி 2ஆவது இனிங்ஸில் 192 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 94 ஓட்டங்கள் என்ற இலக்கை இலகுவாகப் பெற்று போட்டியில் வெற்றிகொண்டது.

முதல் இனிங்ஸில் இங்கிலாந்து இளைஞர் அணி லஹிரு குமாராவின் பந்து வீச்சிற்கு அடி பணிந்து 208 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தனி ஒருவனாக போராடிய ஹோல்டன் சதம் அடித்து இங்கிலாந்து இளைஞர் அணிக்கு உதவினார். லஹிரு குமார 7 விக்கட்டுகளைப் பெற்று இலங்கை இளைஞர் அணிக்குப் பாரிய பலமாக அமைந்தார்.

இலங்கை இளைஞர் அணி முதல் இனிங்ஸில் சிறிது தடுமாறிய பொழுதும் நிர்மல் மற்றும் டேனியலின் சிறந்த துடுப்பாட்டத்தால் 307 ஓட்டங்களைப் பெற்றது. டேனியல் 52 ஓட்டங்களும், நிர்மல் 80 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டார்.

பனாயி மற்றும் பார்ன்ஸ் இங்கிலாந்து இளைஞர் அணிக்காக சிறப்பாகப் பந்து வீசியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து இளைஞர் அணி 99 ஓட்டங்கள் பின் தள்ளப்பட்ட நிலையில் 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது.

இரண்டாம் நாளில் 2ஆவது இனிங்ஸை 24 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டுடன் நிறுத்திய இங்கிலாந்து இளைஞர் அணி 3ஆம் நாளை நேற்று துவங்கியது.

ஆரம்ப விக்கட்டை உடனே இழந்தாலும் இரண்டாவது விக்கட்டுக்காக 84 ஓட்டங்களை இணைப்பாகப் பெற்ற ஹன்கிங்ஸ் மற்றும் வெஸ்ட்பரி ஜோடி இங்கிலாந்து இளைஞர் அணிக்கு நம்பிக்கை கொடுத்தது.

எனினும் ஜெயவிக்ரம ஹன்கிங்ஸை ஆட்டமிழக்க செய்து சிறந்த இணைப்பாட்டதிற்கு முற்றுப்புள்ளியிட்டார்.

நிதானமாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த வெஸ்ட்பரி 41 ஓட்டங்களைப் பெற்று இருந்தபோது டேனியல் அற்புதமான களத்தடுப்பின் மூலம் ஆட்டமிழக்க செய்ய இங்கிலாந்து இளைஞர் அணி 89 ஓட்டங்களைப் பெற்ற நிலையில்  மேலும் ஒரு விக்கட்டை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து டெல் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஜெயவிக்ரமாவின் பந்து வீச்சிற்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து இளைஞர்  அணி 89 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

பார்ட்லெட் மற்றும் போப் ஜோடி 36 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து இளைஞர் அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்தனர்.

எனினும் பார்லெட் 26 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலும் மெக்கோய் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையிலும் வேகப் பந்துவீச்சாளர் லஹிருவின் பந்திற்கு ஆட்டமிழக்க மீண்டும் இங்கிலாந்து தடுமாறியது.

பியர்ட், பார்ன்ஸ் மற்றும் போப் முறையே 26,18,23 ஓட்டங்களைப் பெற இங்கிலாந்து இளைஞர் அணி 192 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

94 எனும் இலகுவான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளைஞர் அணிக்கு தலைவர் சரித் அசலங்க 40 ஓட்டங்களைப் பெற்று இலக்கை மேலும் இலகுவாக்கினர்.

தலைவருக்குத் துணையாக பெர்னாண்டோ மாற்று டி சில்வா தலா 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இலங்கை இளைஞர் அணி இலகுவாக 94 ஓட்டங்களைப் பெற்று 4 நாட்களைக் கொண்ட டெஸ்ட் போட்டியை 3 நாட்களிலேயே வெற்றிகொண்டது.

இலங்கை அணிக்காக இரண்டாவது இனிங்ஸில் லஹிரு குமார 4 விக்கட்டுகளைப் பெற்றுக்கொண்டதன் ஊடாக மொத்தமாகப் போட்டியில் 11 விக்கட்டுகளைப் பெற்று ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை இளைஞர் அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி, இவ்வெற்றி அனைவராலும் சேர்ந்து பெறப்பட்டது என்றால் அதில் ஐயம் இல்லை.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணி (முதல் இனிங்ஸ்):208(82.2)

ஹோல்டன் 111*, வெஸ்ட்பரி 45        

லஹிரு குமார 7/82

இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி (முதல் இனிங்ஸ்): 307(84)

நிர்மல் 80*, டேனியல் 52, பெர்னாண்டோ 49

பனாயி 3/51, பார்ன்ஸ் 3/38

இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணி (2ஆவது இனிங்ஸ்): 192/10(66.4) வெஸ்ட்பரி 41, பியர்ட் 26, பார்ட்லெட் 26

லஹிரு குமார 4/52, ஜெயவிக்ரம 3/38

இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி (2ஆவது இனிங்ஸ்): 94/3(10.2)

அசலங்க 40, பெர்னாண்டோ 20, டி சில்வா 20

பனாயி 2/25