சவூதி அரேபியாவின் தமாம் விளையாட்டரங்கில் நேற்று (18) நிறைவுக்கு வந்த 6ஆவது 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை அணி, ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என 8 பதக்கங்களை வென்று அசத்தியது.
18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி பெற்றுக்கொண்ட அதிகளவு பதக்கங்களாகவும், அதிசிறந்த பெறுபேறாகவும் இது பதிவாகியது.
இதில் போட்டித் தொடரின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கம்பளை விக்ரமபாகு வித்தியாலயத்தைச் சேர்ந்த தருஷி அபிஷேகா பேமசிறி தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். போட்டியை அவர் 2 நிமிடங்கள், 14.86 செக்கன்களில் ஓடி முடித்தார்.
இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
அத்துடன் 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டில் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் அம்பகமுவ மத்திய கல்லூரி வீராங்கனை யாமனி துலாஞ்சலி இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்திருந்தார்.
எனவே சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை அணி தங்கப் பதக்கம் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இப் போட்டியில் சீன வீராங்கனை யே மெல்லிங் (2:15.92 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், பிலிப்பைன்ஸ் வீராங்கனை நயோமி மார்ஜோரி சீசர் (2:17.87 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தனர்.
- ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஜனித்துக்கு வெள்ளிப் பதக்கம்
- ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் தனஞ்சனாவிற்கு வெள்ளி, லஹிருவிற்கு வெண்கலம்
- ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 2ஆவது பதக்கதுக்கு குறிவைத்துள்ள தனஞ்சனா
இந்த நிலையில், பெண்களுக்கான கலவை அஞ்சலோட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி போட்டியை 2 நிமிடங்கள், 14.25 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது. இது பெண்களுக்கான கலவை அஞ்சலோட்டத்தில் இலங்கை சாதனையாகவும் பதிவாகியது.
வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை அணியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ, சன்சலா ஹிமாஷனி செனவிரத்ன, தருஷி அபிஷேகா, டில்கி நெஹாரா ஆகியோர் இடம்பெற்றனர்.
இப் போட்டியில் சீனா (2:11.11) தங்கப் பதக்கத்தையும் தாய்லாந்து (2:15.00) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
இது தவிர, 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதி நாளான நேற்றைய தினம் இலங்கைக்கு மேலும் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பவன் நெத்ய சம்பத், 2.03 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொள்ள, தினுக் தேஷான் 2.01 மீற்றர் உயரத்தைத் தாவி 5ஆவது இடத்தைப் பிடித்தார்.
அதேபோல, பெண்களுக்கான முப்பாய்ச்சலில் டில்கி நெஹாரா (12.35 மீற்றர்) மற்றும் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஷவிந்து அவிஷ்க (1:53.41 நி.) ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
இதனிடையே, போட்டித் தொடரின் முதலாம் நாளன்று ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் ஜனித் லக்ஷான் ஜென்கின்ஸ் (15.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், இரண்டாம் நாளன்று பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனஞ்சனா செவ்மினி பெர்னாண்டோ (11.92 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் லஹிரு அச்சின்த (3:59.47) வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சவூதி அரேபியாவில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 18 வயதின்கீழ் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை ஒரு தங்கப் பதக்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 8 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பிடித்தது.
சீனா 19 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க, ஜப்பான் 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. போட்டியை நடத்திய சவூதி அரேபியா 3 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<