மயிரிழையில் வெற்றியை தவற விட்ட இலங்கை ஹொக்கி அணி

263
Photo credit: Asian Hockey Federation

ஹொங் கொங் கிங்ஸ் பார்க் உள்ளக ஹொக்கி அரங்கில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ண போட்டிகளில், B குழுவிற்கான  சிங்கப்பூருடனான  போட்டியில் இறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இலங்கை அணி போட்டியை 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலைப்படுத்தியது.

முன்னைய போட்டி விபரங்களுக்கு

இப்போட்டி ஆரம்பித்து 23ஆவது நிமிடத்தில் சிங்கப்பூர் அணிக்காக இஷ்வர்பல் சிங், தனக்கு கிடைத்த பெனால்டி கோனர் வாய்ப்பை பயன்படுத்தி முதலாவது கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் கடந்த நிலையில், தரங்க குணவர்தன போட்டியை சமப்படுத்தும் வகையில் இலங்கை அணிக்கான முதல் கோலினைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர் முன்னிலை வீரர் சந்தருவன் பிரியலங்க 41வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இலங்கை அணியை முதல் பாதியில் முன்னிலைப் படுத்தினார்.

முதல் பாதி: இலங்கை 02 – 01 சிங்கப்பூர்

முதல் பாதியில் முன்னிலையில் இருந்த போதிலும், இலங்கை அணிக்கு அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சிங்கப்பூர் அணி தனது முழு பலத்தினையும் பிரயோகித்து பாசரி ஜெய்லானி மூலம் இரண்டாவது கோலையும் அடித்து போட்டியை மீண்டும் சமப்படுத்தியது.

அதன் பின்னர் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானதாக மாறியது. இந்தப் போட்டியில் தமது அணியை முன்னிலைப்படுத்தும் நோக்கில் 51ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர் லஹிறு பந்திகே கோல்  ஒன்றினை அடித்தார்.

இதனால் எதிரணிக்கு அழுத்தம் அதிகரித்தது. எனினும் தமது முயற்சிகளை இறுதி வரை கைவிடாமல் விளையாடியமையினால் சிங்கப்பூர் அணிக்கு 69ஆவது நிமிடத்தில் கோ காய் யங் மூலம் ஒரு கோல் பெறப்பட்டு, போட்டி சமநிலைப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒருவரும் கோல்கள் எதனையும் பெறவில்லை.

முழு நேரம்: இலங்கை 03 – 03 சிங்கப்பூர்

இதுவரை நடைபெற்ற குழு நிலைப் போட்டிகளின் முடிவுகளின்படி, இலங்கை ஹொக்கி அணி 4 புள்ளிகளுடன் B குழுவில் முன்னிலை வகிக்கும் அதே நேரம், A குழுவில் பங்களாதேஷ் அணி 6 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ணம் 2016 – புள்ளிகள் அட்டவணை

குழு A தரம் போட்டிகள் வெற்றி சமநிலை தோல்வி புள்ளிகள்
பங்களாதேஷ் 1 2 2 0 0 6
ஹொங் கொங் 2 2 1 0 1 3
சைனிஸ் தைபெய் 3 2 1 0 1 3
மக்காவு 4 2 0 0 2 0
குழு B தரம் போட்டிகள் வெற்றி சமநிலை தோல்வி புள்ளிகள்
இலங்கை 1 2 1 1 0 4
சிங்கப்பூர் 2 2 1 1 0 4
தாய்லாந்து 3 2 0 1 1 1
உஸ்பகிஸ்தான் 4 2 0 1 1 1

இந்நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி (நாளை) இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கை நேரப்படி மாலை 5:3 மணிக்கு நடைபெறவுள்ளது.