11ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இம்முறைப் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் பெங்களுருவில் நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் (12) முடிவடைந்தது. இதனையடுத்து இன்று ஐ.பி.எல். ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏலத்தில் பங்கேற்க 1122 வீரர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

281 நட்சத்திர வீரர்கள், 838 பிரபலமல்லாத வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க பெயர்களை பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள நட்சத்திர வீரர்கள் இதில் பங்கேற்றாலும் இந்தியாவின் மிகவும் பிரபலமான வீரர்கள் இந்த சீசனில் முக்கியத்துவம் பெறுவார்கள். அத்துடன், இந்தியாவிலிருந்து 778 வீரர்கள் இம்முறை ஏலத்தில் போட்டியிடவுள்ளதுடன், தற்போது நடைபெற்று வருகின்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்காக விளையாடுகின்ற பிரித்வி ஷா மற்றும் தீபக் ஹுதா ஆகிய வீரர்களும் முதல் முறையாக ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

இதன்படி, 282 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ள இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 58 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னாபிரிக்காவில் இருந்து 57 வீரர்களும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கையிலிருந்து தலா 39 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 30 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 26 வீரர்களும், ஆப்கானிஸ்தானிலிருந்து 13 வீரர்களும், பங்களாதேஷிலிருந்து 8 வீரர்களும், ஜிம்பாப்வேயிலிருந்து 7 வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கின்றனர். எனினும், வழமை போல பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இம்முறை தொடரிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஐ.சி.சி இன் அங்கத்துவ நாடுகளான அமெரிக்காவில் இருந்து 2 வீரர்களும், ஸ்கொட்லாந்தில் இருந்து ஒரு வீரரும் இம்முறை ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஒரேயொரு இலங்கை வீரரான லசித் மாலிங்கவை, விடுவிக்க மும்பை அணி கடந்த சில தினங்களுக்கு முன் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை சார்பாக போட்டியிடுகின்ற முன்னிலை வீரராக லசித் மாலிங்க இடம்பிடித்துள்ளார்.

அத்துடன், கடந்த முறை ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணியால் 2 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ், இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளதுடன், மற்றுமொரு அனுபவமிக்க சகலதுறை வீரரான திஸர பெரேராவும் இம்முறை ஏலத்திற்காக விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த காலங்களில் இலங்கை அணிக்காக அபாரமாக விளையாடி வருகின்ற மற்றுமொரு அதிரடி ஆட்டக்காரரான நிரோஷன் திக்வெல்லவும் இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், ரவிச்சந்திரன அஷ்வின், அஜின்கே ரஹானே ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், முரளி விஜய், சுழல் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சர்வதேச வீரர்களைப் பொருத்தவரை கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் லையன், இயென் மோர்கன், டுவைன் பிராவோ, கொலின் முன்ரோ ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயிலின் ஒப்பந்தம் நீடிக்கப்படவில்லை. எனவே, அவர் மீண்டும் ஏலத்தில் பங்கேற்கிறார். அதேபோன்று, இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் முதல் முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கிறார்.

தீக்ஷன் குணசிங்கவின் சதத்தோடு வலுவடைந்திருக்கும் அந்தோனியார் கல்லூரி

தென்னாபிரிக்கா சார்பாக ஏ.பி டிவில்லியர்ஸ் ரோயல் செலஞ்சர்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், ஹஷிம் அம்லா, ககிசோ ரபாடா, பாப் டூ பிளெசிஸ், மோர்னி மோர்கல் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் போட்டியிடவுள்ளனர்.

அவுஸ்திரேலியா சார்பாக ஸ்டீவ் ஸ்மித் (ராஜஸ்தான் ரோயல்ஸ்) மற்றும் டேவிட் வோர்னர் (சன்ரைஸஸ் ஹைதராபாத்) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், கிளென் மெக்ஸ்வெல், ஷேன் வொட்சன், பெட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிட்செல் ஜொன்சன் ஆகியோர் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நாடுகள் வீரர்கள் எண்ணிக்கை
ஆப்கானிஸ்தான் 13
அவுஸ்திரேலியா58
பங்களாதேஷ் 8
இங்கிலாந்து 26
அயர்லாந்து2
நியூசிலாந்து30
ஸ்கொட்லாந்து1
தென்னாபிரிக்கா57
இலங்கை39
ஐக்கிய அமெரிக்கா2
மேற்கிந்திய தீவுகள்39
ஜிம்பாப்வே

7