பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

5457

இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பமாகும் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 16 பேர் அடங்கிய இலங்கை குழாத்தினை வெளியிட்டுள்ளது.

[rev_slider LOLC]

தினேஷ் சந்திமால் தலைமையிலான இந்த டெஸ்ட் குழாத்தில் இலங்கை அணியின் துணைத் தலைவராக சுரங்க லக்மால் முதற்தடவையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இறுதியாக இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் துணைத் தலைவராக இருந்த லஹிரு திரிமான்ன மற்றும்  ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இதன்படி, 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை ஒரு நாள் அணியின் ..

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமான கொல்கத்தாவில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய லக்மாலுக்கு இத்தொடரில் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது அவர் இலங்கை டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் ஒன்றினை அடைந்துவிட்டார் என்பதனை ஊர்ஜிதம் செய்கின்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் லக்மாலினால் இரண்டு இன்னிங்சுகளிலும் 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினேஷ் சந்திமால் தலைமயிலான இலங்கை டெஸ்ட் அணி அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை 1-0 என போராட்டமான முறையில் விளையாடி பறிகொடுத்ததும், பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரினை அவர்களது இரண்டாம் தாயகத்தில் வைத்து 2-0 என கைப்பற்றியிருந்ததும் இதற்கு சான்றுகளாகும்.

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய திரிமான்ன அப்போட்டிகளில் அரைச் சதம் ஒன்றினை மாத்திரமே குவித்திருந்தார். இதுவே, அவர் இத்தொடரில் இருந்து நீக்கப்பட காரணமாக அமைகின்றது.

அதேபோன்று, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம தனக்கு இந்திய அணியுடன் விளையாட வாய்ப்பளிக்கப்பட்ட ஆறு இன்னிங்சுகளிலும் பெறுமதியான எதனையும் செய்திருக்கவில்லை. இவருக்குப் பதிலாக இலங்கை அணிக்கு மீண்டும் குசல் மெண்டிஸ் அழைக்கப்பட்டிருக்கின்றார்.  

ஹத்துருசிங்கவின் வேண்டுகோளை நிறைவேற்றிய மெதிவ்ஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ்…

சுழல் வீரரான அகில தனன்ஞய இந்த டெஸ்ட் தொடர் மூலம் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை முதல் தடவையாக பெற்றுள்ளதோடு, வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் துஷ்மந்த சமீர ஆகிய வீரர்களும் குழாத்தினுள் அடங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த டெஸ்ட் தொடரில் சகல துறை வீரரான அசேல குணரத்னவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 32 வயதாகும் அசேல ஒகஸ்ட் மாதம் காலியில் நடைபெற்ற இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது விரல் உபாதைக்கு உள்ளாகியிருந்தார். உபாதை சரியான பின்னர் இந்திய அணியுடனான ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகள் மூலம் இலங்கை அணிக்கு திரும்பிய இவருக்கு பங்களாதேஷில் நடைபெறவிருக்கும் முக்கோண ஒரு நாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த டெஸ்ட் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில்  விளையாடுகின்றது. முதல் போட்டி ஜனவரி மாதம் 31ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 4ஆம் திகதி வரை சிட்டகொங் நகரில் நடைபெறவுள்ளதோடு, இரண்டாம் போட்டி பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை டாக்காவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும் பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக அண்மையில் கடமையேற்றார். இந்நிலையில் தனது முன்னைய அணிக்கு எதிரான தொடரிலேயே ஹத்துருசிங்க இலங்கை அணிக்காக முதல் முறை பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணிக்குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்) , திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரொஷென் சில்வா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால் (பிரதி அணித்தலைவர்), தில்ருவான் பெரேரா, துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகன், அகில தனன்ஞய, லஹிரு கமகே, லஹிரு குமார