சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரின் இறுதிக்கட்டம் தியகமவில்

141

சேர். ஜோன் டாபர்ட் பாடசாலைகள் மெய்வல்லுனர் தொடரின் கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிகள் 08ஆம் திகதி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

48ஆவது தடவையாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் வலய மட்டங்களில் நடைபெற்ற தெரிவுப் போட்டியிலிருந்து தகுதியைப் பெற்றுக்கொண்ட சுமார் 350 பாடசாலைகளைச் சேர்ந்த 2100 பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடந்த காலங்களில் நடைபெற்ற இப்போட்டித் தொடருக்காக நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் ஆயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்வதால் ஏற்படுகின்ற நெருக்கடிகள் மற்றும் நடைமுறை சிக்கல்களை தவிர்த்துக் கொள்ளும் முகமாக சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளை புதிய பரிமாணத்துடன் நடத்துவதற்கு இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து பொலன்னறுவை, ஹங்வெல்ல மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய வலயங்களில் 3 சுற்றுக்களாக முதல் சுற்றுப் போட்டிகள் கடந்த ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன. இதில் அடைவு மட்டத்தைப் பூர்த்தி செய்த வீரர்கள் நாளை ஆரம்பமாகவுள்ள இறுதிச் சுற்றில் களமிறங்கவுள்ளனர். அத்துடன், இப்புதிய முறையின் கீழ் தனிநபர் போட்டியொன்றுக்காக பங்குபற்றுகின்ற வீரர்களின் எண்ணிக்கையை 60 வரை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இப்போட்டித் தொடரின் செயலாளர் லக்‌ஷ்மன் ஹெட்டியாரச்சி எமது இணையத்துக்கு தெரிவித்தார்.

இதன்படி, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக 60 விளையாட்டுக்களின் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், இப்போட்டிகள் அனைத்தும் 12,13,14 மற்றும் 15 ஆகிய வயதுப் பிரிவுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்தில் முதல் பதக்கம் வென்ற மண்டூர் சாதனை வீரன் குகேந்திரன்

அத்துடன், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்காக 8 சம்பியன் பட்டங்களை வழங்குவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், வருடத்தின் சிறந்த கனிஷ்ட வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதுகளுடன், நீளம் பாய்தலில் சிறந்த தூரத்தை வெளிப்படுத்துகின்ற வீரர் அல்லது வீராங்கனைக்கான சிறப்பு விருதொன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளுக்கான அனுசரணையை வரையறுக்கப்பட்ட சிலோன் பிஸ்கட் நிறுவனம் (ரிட்ஸ்பரி) வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.